;
Athirady Tamil News

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மூன்று தசாப்த காலத் தேடலும் புதிய திருப்பமும்!

0
– மயூரப்பிரியன் –

இலங்கையின் மிக பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி விவகாரம் சுமார் மூன்று தசாப்தங்களாக நீண்டு செல்கின்றது.

மூன்று தசாப்தங்களாக நீளும் இந்த வழக்கு விசாரணைகளில் தற்போது புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் கடந்த 19ஆம் திகதி  திங்கட்கிழமை தொல்லியல் பேராசிரியர் சமர்ப்பித்த  ஆய்வறிக்கை மற்றும் குற்றப்புலனாய்வு துறையினர் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளும் , விசாரணை போக்கும் இந்த வழக்கில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக செம்மணி புதைகுழி வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியிடம் விசாரணைகளை மேற்கொண்டு , வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளமையானது , பல ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி புதைகுழி. 
செம்மணி “சிந்துபந்தி இந்து மயானத்தில்” மின் தகன மேடை அமைப்பதற்காக கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அத்திபாரம் வெட்டிய போது, சில என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதனை அடுத்து, இந்து மயானம் அமைந்துள்ள பகுதி யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்ட பகுதி என்பதால், அதொரு மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது

அதனை தொடர்ந்து செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு , இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரையில்,  செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,  அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்டத்திற்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது 
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் நிறைவு கால பகுதியில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில், நீதிமன்றில் அனுமதி கோர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட செம்மணி வழக்கு. 
இவ்வாறான நிலையில் செம்மணி புதைகுழி வழக்கு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்லியல் பேராசிரியரால் ஆய்வறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கைகளின் பிரதிகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டது.
அதேவேளை அன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினரால் , முக்கியமாக இரு கோரிக்கைகள்  மன்றில் முன்வைக்கப்பட்டன.
அதாவது புதைகுழியின் கால எல்லையை அறிவதற்காக கார்பன் (C – 14) பரிசோதனைகளை செய்வதற்கான அனுமதியும், பாடசாலை மாணவியான கிரிஷாந்தி கொலை வழக்கின்  மரண தண்டனை கைதியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற மன்றிடம் அனுமதி கோரினர்.
அதற்கு கார்பன் பரிசோதனைக்கான அனுமதி தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்வதாக கூறிய மன்று , மரண தண்டனை கைதியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
யார் இந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சே ?
கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிரிஷாந்தி குமாரசுவாமியை செம்மணியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில் வழிமறித்து , சோதனை சாவடிக்குள் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமை , மாணவியை தேடி சென்ற மாணவியின் தாயாரான இராசம்மா , தம்பியாரான பிரணவன் , அயல்வீட்டாரான கிருபாகரமூர்த்தி ஆகியோரை படுகொலை செய்தமை ஆகிய குற்றங்களுக்கு 1998ஆம் ஆண்டு  நீதாய மன்ற விசாரணை (Trial-at-Bar) சோமரத்ன ராஜபக்சே உள்ளிட்ட 06 பேரை குற்றவாளிகளாக கண்டு மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, சோமரத்ன ராஜபக்சே நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வழங்கினார்.

தான் யாரையும் கொலை செய்யவில்லை என்றும், மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட சடலங்களை மாத்திரமே புதைத்ததாகவும் , அவ்வாறாக செம்மணி பகுதியில் 300 முதல் 400 வரையிலான சடலங்களை புதைத்ததாகவும் கூறினார் .

 
 1999ஆம் ஆண்டு மீட்கப்பட்ட என்புக்கூடுகள்.
சோமரத்ன ராஜபக்சே நீதிமன்றில் வழங்கிய தகவலின் அடிப்படையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்போடு கடந்த 1999 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாய்வு நடத்தப்பட்ட போது, 15 என்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில் , 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்களை ஆடை மற்றும் பிற அடையாளங்களை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டி இருந்தனர்.

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலங்களில், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூற்று ஆய்விலும் உறுதியானது.

பின்னரான கால பகுதியில் போர் சூழல் , அரசியல் , அரசாங்க மாற்றங்கள் என்பவற்றால் அவை கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் பேசுபொருளான சோமரத்ன ராஜபக்சேவின் வாக்கு மூலம் 
செம்மணியில் கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மனித என்புகூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட போது, சோமரத்ன ராஜபக்சே நீதிமன்றில் 1998ஆம் ஆண்டு கூறிய “செம்மணியில் 300 முதல் 400 வரையிலான சடலங்களை புதைத்தோம்” எனும் தகவல் பேசுபொருளானது.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பிய கடிதம்.
அவ்வாறான நிலையில், சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான  எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம்  அனுப்பி வைத்திருந்தார்.
அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன
குறித்த கடிதத்தில், 
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும்

வடக்கில் 1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகளினது பெயர் விபரங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும்,

இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 சோமரத்ன ராஜபக்சேவிடம் விசாரணை. 
சோமரத்ன ராஜபக்சேயின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் மற்றும் , 1998ஆம் ஆண்டு நீதிமன்றில் வெளிப்படுத்திய தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தி, அவரிடமிருந்து வாக்கு மூலங்களை பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் செய்த சமர்ப்பனத்தை அடுத்து , விசாரணைகளை செய்து வாக்குமூலம் பெற மன்று அனுமதி வழங்கியுள்ளது.
குற்ற புலனாய்வு துறையினரின் விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ஷ எவ்வித நிபந்தனைகளும் இன்றி , விசாரணைக்கு ஒத்துழைத்து , தனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் வெளிப்படையாக வாக்கு மூலம் வழங்கினால். செம்மணி புதைகுழி வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தலாம். பல உண்மைகளை வெளிக்கொணரலாம்.
மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை மற்றும் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் ஆகியவை  செம்மணி புதைகுழி தொடர்பில்  மறைக்கப்பட்ட  பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று தசாப்த காலங்கள் கடந்தாலும், நடுநிலையான விசாரணைகளின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வருவது ஒன்றே உண்மையான நீதியாக இருக்க முடியும்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.