;
Athirady Tamil News

இந்திய விமானிக்கு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

0

துபாய்,

நடுவானில் சக துணை விமானியின் கொடூர கோடாரித் தாக்குதலையும் மீறி, துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது உயரிய குடிமை விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

நடுவானில் நடந்த திரில்லர்
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ‘பிளை துபாய்’ (flydubai – FZ1073) விமானம் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று 174 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. சவுதி அரேபிய வான்வெளியில் 34,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹமாமி, திடீரென காக்பிட்டில் இருந்த அவசரக்கால கோடரியால் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தலைப்பகுதியில் கொடூரமாக தாக்கினார்.

30 நொடி மரணப் போராட்டம்
தாக்குதலுக்குப் பின், விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் துணை விமானி அதை முடுக்கியதால், விமானம் வெறும் 30 நொடிகளுக்குள் சுமார் 14,000 அடி கீழே செங்குத்தாக இறங்கியது. தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையிலும், தனது இறுதி கட்ட ஆற்றலைத் திரட்டிய ஸ்மித் மச்சார், காக்பிட் கதவின் அவசரக்கால ‘ரிலீஸ்’ பொத்தானை அழுத்தினார். கதவு திறந்ததும், உள்ளே நுழைந்த விமானப் பணியாளர்களும் பயணிகளும் இணைந்து ஹமாம் அல்-ஹமாமியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

உயரிய ‘ஆர்டர் ஆப் ஜாயித்’ விருது
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவின் பேரில், ‘பர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆப் ஜாயித் II’ (First Class Order of Zayed II) விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த (செவ்வாய்க்கிழமை) அன்று அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் துபாயின் முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் இந்த உயரிய விருதை ஸ்மித்திற்கு நேரில் வழங்கி சிறப்பித்தார்.

உலகத் தலைவர்கள் பாராட்டு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கேப்டன் ஸ்மித் மச்சாரை “உண்மையான கதாநாயகன்” என்று எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக, ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய ‘குடிமகன் வீர விருது’ (Civilian Bravery Award) வழங்கப்படும் என இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.