;
Athirady Tamil News

ஊர்களின் பெயர்களை வாசிக்க முடியாமல் திணறும் பயணிகள்-உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

0

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பிரயாணம் செய்வோர் இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தெளிவாக இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகள் மற்றும் கரையோரப் பிரதேசங்களை இணைக்கும் முக்கிய வீதிகளில் நடப்பட்டுள்ள பெரும்பாலான பெயர் பலகைகளில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாகவும், நிறங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி, இரவு வேளைகளில் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் (Reflective) தன்மையற்ற முறையில் இவை அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஊர்களின் பெயர்களையும் தூரங்களையும் அடையாளம் காண்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாகப் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், ஊர்களின் எல்லைகளையும் பெயர்களையும் சரியாக அடையாளம் காண முடியாமல் வழியறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் பெயர் பலகைகள் முறையான பராமரிப்பின்றிப் பொலிவிழந்து காணப்படுவதோடு, சில இடங்களில் வீதியோர மரங்களின் கிளைகளினாலும் புதர்களினாலும் மறைக்கப்பட்டு வாசிக்க முடியாதவாறு காட்சிளிக்கின்றன.

வாகனங்களை அதிவேகமாகச் செலுத்திச் செல்லும்போது தெளிவற்ற பெயர் பலகைகளை உற்றுநோக்க முற்படுவதால் ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்துக்கள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது.எனவே, பிரயாணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபை இது விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தெளிவற்ற மற்றும் சேதமடைந்த பெயர் பலகைகளை அகற்றிவிட்டு, தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையிலான புதிய வழிகாட்டிப் பலகைகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டுநர்களும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.