;
Athirady Tamil News

“இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை” நூல் அறிமுக நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுத்தம்!

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு எழுதிய நூலொறின் அறிமுக நிகழ்வை நடத்த கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி இறுதி நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய “இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்” என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி , பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற இருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வை நடத்த அனுமதிக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளிநபர்களின் பங்கேற்பு இருந்தால் அதற்கு கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறவேண்டும் என்ற சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி குறித்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் குறித்த நிகழ்வை நிறுத்தவில்லை என்றும் நிகழ்வை நிறுத்தியது பற்றி அரசறிவியல் ஒன்றியத்திடமே கேட்க வேண்டும் என்றும், முறைப்படி அனுமதி எடுக்கவில்லை என்ற காரணத்தால் அதனை எடுக்கும் வரை நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.