;
Athirady Tamil News

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா? பரபரப்பு தகவல்

0

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால், 96 மணி நேரத்திற்குள் ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே போதுமான அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், புதிய தாக்குதல்களை விரைவாகத் தொடங்க முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.ஈரானின் ரேடார்கள், ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட ராணுவ இலக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்களையும் குறிவைக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் விரிவான திட்டங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு தாக்குதல்?

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் முடிந்த பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களுக்கு டிரம்ப் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரானும் ஹவுதி கிளர்ச்சிப் படையினரும் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறையும் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மட்டுமின்றி, அதற்கு அப்பாலும் தாக்குதல்கள் விரிவடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

8 மாதங்களாக நீடிக்கும் போர்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் வெடித்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடுத்தன. ஆனால் 8 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிந்தபாடில்லை. ஈரான் அமெரிக்கா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படாமல் உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் தேர்தல் நடந்து வருவதாலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுவதற்கான முயற்சிகள் நடப்பதாலும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று சர்வதேச நோக்கர்களால் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில்தான் இடைக்கால தேர்தலுக்கு பிறகு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.