;
Athirady Tamil News

காதலை கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி ; தந்தை செய்த கொடூர செயல்

0

இந்தியாவின் தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் காதலை கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா, வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த சிவசாஸ்திரி (40) என்பவரே இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது இரண்டாவது மகள், ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்த விடயம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, மாணவி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு கரசானூரில் உள்ள பாடசாலையில் 10ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், தொடர்ந்து குறித்த இளைஞருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகக் கூறப்படும் மாணவியை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாணவியின் தாயார் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ராணிப்பேட்டைக்குச் சென்றிருந்தார்.

இரவு வீட்டில் தந்தையும் இரண்டாவது மகளும் இருந்த நிலையில், மூத்த மகளை அருகிலுள்ள சித்தப்பா வீட்டில் தூங்குமாறு அனுப்பியுள்ளார்.

பின்னர், இரண்டாவது மகளிடம் குறித்த இளைஞருடனான காதலைக் கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தந்தை, மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனது சகோதரருக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகளைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சகோதரர், மாணவியை வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மகளைக் கொலை செய்ததாகக் கூறி சிவசாஸ்திரி வானூர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ள சம்பவம் வானூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.