;
Athirady Tamil News

1,431.5 கிலோ ராட்சத பூசணிக்காய் ஹாலோவீன் விளக்காக மாற்றம்: அமெரிக்காவில் புதிய கின்னஸ் உலக சாதனை!

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சேலம் நகரில், 1,431.5 கிலோகிராம் (3,156 பவுண்ட்) எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய், ஒரு பிரம்மாண்டமான ஹாலோவீன் விளக்காக செதுக்கப்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகின் மிக அதிக எடையுள்ள விளக்கு

அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த பிரபல விவசாயி ரான் வாலஸ் என்பவர் ராட்சத பூசணிக்காயை தனது பண்ணையில் வளர்த்தெடுத்தார். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி அன்று இது 3,000 பவுண்டுகளுக்கு மேல் (1,431.5 கிலோகிராம் ) எடை கொண்ட உலகின் மிகப் பெரிய பூசணிக்காய் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. இந்த ராட்சத பழத்தை ஹாலோவீன் விளக்காக மாற்ற அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

32 மணி நேரக் கலை உழைப்பு

‘ரைசிங் கேன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் டாட் கிரேவ்ஸ் மற்றும் அவரது குழுவினர், நிபுணத்துவம் வாய்ந்த சிற்பிகளுடன் இணைந்து இந்த விளக்கைச் செதுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 32 மணி நேரம் இடைவிடாது உழைத்து, மிகவும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் இந்த பிரம்மாண்ட விளக்கு செதுக்கப்பட்டது. இதில் எலும்புக்கூடுகள், மாந்திரீகவாதி மற்றும் பறக்கும் வௌவால்கள் போன்ற முப்பரிமாண (3டி) வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முந்தைய உலக சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு கடந்த 2023-ம் ஆண்டில் டிராவிஸ் கீங்கர் என்பவர் உருவாக்கிய 1,246.9 கிலோகிராம் (2,749 பவுண்ட்) எடையுள்ள விளக்கே உலக சாதனையாக இருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய விளக்கு, முந்தைய சாதனையை விட சுமார் 184 கிலோகிராம் கூடுதல் எடை கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பொது மக்கள் பார்வை -பண்ணை உணவு

சேலம் காமன் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த விளக்கை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். சேலம் நகரின் 400-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது காட்சிப்படுத்தப்பட்டது. பண்டிகை நிறைவடைந்த பிறகு, இந்த பூசணிக்காய் வீணாக்கப்படாமல் பண்ணை விலங்குகளுக்கு உணவாக வழங்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.