கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் உள்நாட்டுப் போர்ச் சூழல் காரணமாக, வலிகாமம் வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து ஒரே இரவில் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின.
உடுத்த உடையுடன் உயிரைக் கையில் பிடித்தவாறு ஓரிரு நாட்களில் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் ,வெளியேறிய இம்மக்கள், தமது செழிப்பான விவசாய நிலங்களையும், கடற்றொழில் வாழ்வாதாரங்களையும், பரம்பரை சொத்துக்களையும் மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் இழந்து நிர்க்கதியானார்கள்.
‘உயர் பாதுகாப்பு வலயமாக’ இப்பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாத சூழலில் இம்மக்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
தகரக் கொட்டகைகளுக்குள்ளும், அடிப்படை வசதிகளற்ற முகாம்களிலும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவர்கள் கழித்த வாழ்க்கை என்பது சொல்லான துன்பங்களுடன் கழிந்தன.
அடுத்த ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுமார் 1,600 முதல் 2,100 வீடுகள் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேலும் பல ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 13ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்கி, 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள் அவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் இலக்கு என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், பலாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டு திட்டம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் சுமார் 5,ஆயிரம் வீடுகளையும், 2028ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள 7 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்
வீடமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்படாமல், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கையில் புதிய அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்குவோம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நீண்டகாலப் போராட்டத்திற்கும் காத்திருப்பிற்கும் பின்னர் கிடைத்துள்ள நில விடுவிப்பும், அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களும் வலிகாமம் வடக்கு மக்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன.
சொந்த வீடு என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. சொந்த மண்ணில் சொந்த வீடு என்பது அவர்களின் 3 தசாப்த காலங்களை கடந்த நீண்ட கனவு என்ற வகையில், இத்திட்டங்கள் அப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார நிலைத்தன்மைக்கு வலுவான அடித்தளமிட்டுள்ளன.
எஞ்சியுள்ள காணிகளையும் முழுமையாக விடுவித்து, மீள்குடியேறிய மக்களுக்கான போக்குவரத்து, கல்வி மற்றும் வாழ்வாதார வசதிகளைத் தொடர்ச்சியாக உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன், இம்மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், கடற்றொழில் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக மேம்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
