இலங்கையில் மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!
இலங்கையில் 19 வயது இளைஞரின் இதயம் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
விபத்தில் மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞரின் இதயத்தை, 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்துவதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
இது இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சையாகும்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான மருத்துவக் குழுவினர், கடந்த 26ஆம் திகதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை 7 மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுவன் தற்போது மிகவும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞர் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது இதயத்தை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
குறித்த இதயத்தை கம்பஹா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வருவதற்கு விமானப்படை ஏற்பாடு செய்திருந்தது.
எனினும், விசேட பொலிஸ் பாதுகாப்புடன் வீதி வழியாக இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் மூலம், உரிய நேரத்தில் இதயத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்த மருத்துவக் குழுவினர் சாதித்துள்ளனர்.