கொக்கிளாய் பாலம் வடக்கு, கிழக்கு சுற்றுலா துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்: ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை!
வடக்கு – கிழக்குக்கு இடையிலான கொக்கிளாய்–புல்மோட்டை இணைப்புப் பாலத் திட்டம் இரு மாகாணங்களுக்கிடையிலான சுற்றுலா, போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்
பாலம் அமைக்கும் பணிகள் 2027ஆம் ஆண்டு ஆரம்பித்து, 2029ஆம் ஆண்டில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு–கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான பயண நேரமும் இடைவெளியும் கணிசமாகக் குறைவதுடன், சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்
கிழக்கில் திருகோணமலை, நிலாவெளி, பாசிக்குடா, அறுகம்பே போன்ற இடங்கள் ஏற்கனவே சர்வதேசச் சுற்றுலாவிகளிடையே நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளன
அதேவேளை, வடக்கு மாகாணத்துக்கும் தனித்துவமான சுற்றுலா வளங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம், யாழ்ப்பாணக் கோட்டை, கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மீகத் தலங்கள்; நெடுந்தீவு, நயினாதீவு, காரைநகர் கசூரினா கடற்கரை போன்ற தீவுசார் மற்றும் கடற்கரைப் பகுதிகள்; சுண்டிக்குளம், மன்னார் வங்காலை போன்ற இயற்கை மற்றும் பறவைகள் அவதானிப்புக்குப் பொருத்தமான இடங்கள்; வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், பனைசார் உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்கள் எனப் பல்வேறு அனுபவங்களைச் சுற்றுலாவிகளுக்கு வழங்க முடியும்
அதேபோன்று, வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளை கிழக்கு மாகாணத்துக்கும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு மாகாணத்தின் சுற்றுலா அனுபவத்தை மற்றைய மாகாணத்துக்கும் கொண்டு செல்லக்கூடிய புதிய சந்தை உருவாகும் என ஆளுநர் தெரிவித்தார்
