;
Athirady Tamil News

கொழும்பு சென்ற பஸ் மீது கற்பாறை விழுந்ததில் பயணி பலி! சம்பவத்தால் அதிர்ச்சி

0

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (28) பிற்பகல் சுமார் 2.30 அளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை

ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ் பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பஸ்ஸின் மீது விழுந்துள்ளது.

இதில் பஸ்ஸின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், அவரை பொலிஸாரும் பயணிகளும் இணைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர், அகரபத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான முட்டன் சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கற்பாறை மோதியதில் பஸ்ஸுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பொல்பிட்டிய பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாறை உருண்டு பேருந்தின் மீது விழுந்திருக்கலாம் என விபத்து குறித்து விசாரணை நடத்தும் பொல்பிட்டிய பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.