;
Athirady Tamil News

இந்தியாவில் ‘ஓல்ட் மாங்க்’ ரம்மை ஓரங்கட்ட வரும் விதவிதமான மது ரகங்கள் – விலை என்ன தெரியுமா?!! (கட்டுரை)

0

வரைபட கலைஞரான (கிராஃபிக்ஸ் டிசைனர்) ராகுல் நாயர் மதுப்பிரியரும் கூட. 32 வயதான இவர் ஒவ்வொரு முறையும் மதுபான கூடத்தில் ‘டைகிரி’ (Daiquiri) ‘டார்க் என் ஸ்ரோமி’ (Dark ‘n’ Stormy) வகை ‘காக்டைல்’ மதுபான வகைகளை விரும்பி பருகும்போதும் அதில் பயன்படுத்தப்படும் ரம் வகை என்ன என்பது குறித்து மதுபானக் கூட ஊழியர்களிடம் கேட்டறிவதில் ஆர்வம் மிக்கவராக உள்ளார். இன்னும் சொல்லப் போனால், தான் விரும்பி பருகும் காக்டைல் மதுபானத்தில் கலக்கப்படும் ரம்மின் பிராண்ட் பெயரை தானே கண்டறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார் நாயர்.

ஷார்ட் ஸ்டோரி ( Short Story),மகா ஜாய் (Maka Jai) மற்றும் கமிகாரா (Camikara) போன்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ‘ரம்’ வகை மதுபானங்கள், சில ஆண்டுகளாக மதுபான விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன. இதன் விளைவாக, அதன் பிராண்ட்டை கேட்டறிவதற்கான ஆர்வம் ராகுல் நாயர் போன்ற மதுப்பிரியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ரம் உற்பத்தி மற்றும் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் காக்டைலின் சுவையை கூட்ட அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை போன்று வேறென்ன இணைப் பொருட்களை சேர்க்கலாம் என்பன போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் புதுமை முயற்சிகளால், ரம்மை நோக்கி காக்டைல் பிரியர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

விஸ்கி, ஜின் உள்ளிட்ட ‘ஹாட்’ மதுபான வகைகளை ஒப்பிடும்போது, உலக அளவில் மதுப்பிரியர்களின் கடைசி விருப்பமாக தான் ரம் உள்ளது என்ற நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. உலகளாவிய இந்த நடைமுறைக்கு மாறாக, இந்தியாவில் ரம் பிரபலமான மதுபானமாக உள்ளது. எளிதில் கிடைப்பது மட்டுமின்றி, விலையும் குறைவாக இருப்பதும், ரம் மதுபிரியர்களை கவர முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் ரம் விற்பனை அதிகரித்துவரும் அளவுக்கு அதை காக்டைலில் பல்வேறு சுவைகளுடன் தருவதற்கான பரிசார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குறையும் மதுபிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.

ஆனால், பெருநகரங்களில் ரம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அதை சுவைக்கும் ஆர்வம் மதுபிரியர்கள் மத்தியில் பெருகி கொண்டிருக்கிறது. எனவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதை விதவிதமான சுவையுடன் தருவதற்கான புதுமையான முயற்சிகளை மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

“ஜப்பான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் பாரம்பரியமாக ரம் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இதுபோன்ற நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ரம் உற்பத்தியில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றன அதன் தயாரிப்பு நிறுவனங்கள் என்கிறார் காக்டைல் நிபுணரும், ‘கன்ட்ரிடாப் இந்தியா’ நிறுவனருமான அரிஜித் போஸ்.

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் மதுபான சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 2020 இல் இந்தியாவின் மதுபான சந்தை விற்பனை 52.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘ரம்’ மதுபான வகையின் பங்களிப்பு மட்டும் 11 சதவீதம்.

உலகமெங்கும் இன்று பரவலாக அறியப்படும் ரம் மதுபானம் தோன்றிய வரலாறு கரீபியன் தீவுடன் தொடர்புடையது. அங்கு கரும்பை பயிரிட்டு வந்த விவசாயிகள், சர்க்கரை பாகுவை கொண்டு மதுபானம் தயாரிக்கலாம் என்று கண்டறிந்தனர். காலனி ஆதிக்கமும், வர்த்தக தொடர்புகளும் ரம்மை உலக அளவில் பிரபலப்படுத்தின.

‘ஓல்டு மாங்க்’ எனும் ரம் வகை தான் இந்தியாவில் பல தசாப்தங்களாக பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது. விலை மலிவான, சுவைமிகுந்த இந்த பிராண்ட், ரம் என்றால் ‘ஓல்டு மாங்க்’ என்று சொல்லும் அளவுக்கு தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் உள்ள மதுப்பிரியர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், புதிய வரவுகளால் மதுப்பிரியர்களின் இந்த மனநிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

சித்தார்த் சர்மாவின் ‘பிக்காடில்லி டிஸ்டில்லரீஸ்’ நிறுவனம், பிரெஞ்சு பாணியில் தயாரிக்கப்பட்ட, 12 ஆண்டுகள் பழமையான ‘கமிகாரா’ எனும் ரம் வகையை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. பொதுவாக சர்க்கரை பாகில் இருந்து ரம் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சித்தார்த் சர்மாவுக்கு சொந்தமான நிலங்களில் விளைவிக்கப்பட்ட கரும்பு சாற்றில் இருந்து நேரடியாக தயாரிக்கப்பட்டது என்பதுதான் கமிகாரா ரம்மின் சிறப்பு.

தற்போதைய நிலையில், ‘கமிகாரா’ இந்தியாவில் மிகவும் அரிதான ரம் வகையாக கருதப்படுகிறது. வெல்ல பாகிற்கு மாற்றாக, சர்க்கரை சாற்றில் இருந்து நேரடியாக தயாரிக்கப்படுவதால் கமிகாரா ரம் வகை அரிதானதாக கருதப்படுகிறது.

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளதால், அதன் மூலப்பொருட்களை கொண்டு மலிவு விலையில் ரம் தயாரிக்க முடிவதாக கூறும் நிபுணர்கள், ஆனால் இவற்றின் நேர்த்தி மற்றும் சுவை சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் ரம் வகைகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது என்கின்றனர்.

வெல்லப் பாகுவை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய தயாரிப்பு ரம்களில் காபி மற்றும் மசாலா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதன் மூலம் அவற்றின் சுவை கூட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக பாட்டில்களில் பாதுகாக்கப்படும் சர்வதேச ரம் வகைகளிலும், கமிகாரா போன்ற இந்திய வகை ரம்மிலும் கூட காபி தூள் உள்ளிட்ட சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.

‘தேர்ட் ஐ டிஸ்டில்லரி’ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ‘ஷார்ட் ஸ்டோரி’ ரம் வகை, உலகில் மிகச் சிறந்த ரம் தயாரிப்பு இடமாக அறியப்படும் கரீபியன் பகுதியில் கிடைக்கும் வெள்ளை நிற மதுபானத்துக்கு இணையான ருசியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இதேபோன்று ‘ஸ்டில்டிஸ்டில்லிங் ஸ்பிரிட்ஸ்’ நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘மக்கா ஜாய்’ எனும் புதிய வகை ரம்மை சந்தையில் அறிமுகப்படுத்தியது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் கோடை காலத்திலும் அருந்துவதற்கு உகந்த விதத்தில் மக்கா ஜாய் தயாரிக்கப்பட்டது.
ரம் பற்றிய மதுபிரியர்களின் புரிதல்

“ரம் குளிர்காலத்தில் மட்டும் பருகுவதற்கு ஏற்ற மதுபானம் என்றும். அதை ‘கோக்’ எனும் குளிர்பானத்துடன் மட்டுமே கலந்து குடிக்க வேண்டும் என்ற பொதுவானதொரு புரிதலும் மதுப்பிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த புரிதலை மாற்றும் நோக்கிலும், காக்டைல் மற்றும் பிராந்தி மதுபான வகைகளை போன்று மதுபிரியர்கள் மிகவும் வசதியாக அனுபவித்து பருகும் பானமாக ரம்மை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் தான் மக்கா ஜாய் ரம்மை அறிமுகப்படுத்தினோம்” என்கிறார் ஸ்டில்டிஸ்டில்லிங் ஸ்பிரிட்ஸ் நிறுவனரான கஸ்தூரி பானர்ஜி.

இதேபோன்று, ஃபுல்லர்டன் டிஸ்டில்லரீஸ் நிறுவனம், ‘செக்ரிடோ அல்டியா’ என்ற பெயரில் புது வகை ரம்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவற்றில் சர்க்கரை மற்றும் வெல்லத்தை மூலப்பொருளாக கொண்டு வெள்ளை நிற ரம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுடன் தென்னிந்தியாவில் இருந்து பெறப்படும் வறுத்த காபி கொட்டைகளுடன் கலந்து ‘கஃபே’ வகை ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரம் வகைகள் 750 மில்லி லிட்டர், 1000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை விற்கப்படலாம்.

இந்த விலை, விஸ்கி அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும், ரம் வகைகளை வாங்க வாடிக்கையாளர்கள் செலவிட்டு வந்த பணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இந்திய ரம் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

வாடிக்கையாளர்களின் தளத்தை விரிவுப்படுத்தும்போது தாங்கள் சந்திக்கும் முக்கிய சவால் அவற்றின் விலை அல்ல; ரம்மை பற்றி புரிதல் நுகர்வோருக்கு இல்லை என்பதுதான் என்கின்றன இந்நிறுவனங்கள்.
சூடுபிடித்த ஜின் விற்பனை

“பிரெஞ்ச், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என்று தயாரிப்பை பொறுத்து ரம்மில் பல்வேறு பாணிகள் உள்ளன. அத்துடன் இந்த பாணிகள் ஒவ்வொன்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாக விளக்கப்படுகின்றன” என்கிறார் பிக்காடில்லி டிஸ்டில்லரீஸ்’ நிறுவனர் சித்தார்த் ஷர்மா.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் உள்நாட்டு தயாரிப்பு ஜின் வகை மது விற்பனை அதிரடியாக உயர்ந்தது. புது புது வகையான மதுபானங்களை நுகர மதுப்பிரியர்கள் விருப்பமாக உள்ளனர் என்பதே, ஜின்னின் திடீர் விற்பனை ஏற்றம் உணர்த்தியதாக கூறுகிறார் அவர்.

வாடிக்கையாளர்களின் இந்த ஆவலை நிறைவேற்றும் விதத்தில், புதுவகை மதுபானங்களையும், காக்டையில் விருந்துகளையும் உணவகங்களும், பார்களும் போட்டி போட்டு கொண்டு வழங்கி வருகின்றன. இதன் பயனாக, சர்வதேச மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பான ரம் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இவற்றில் முக்கியமாக, பிரெஞ்ச் நாட்டு தயாரிப்பு ரம் வகைகள் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் ஜமைக்கா, பார்படாஸ், டிரினிடாட் போன்ற கரீபியன் தீவுகளில் உள்ள பல்வேறு நாடுகளின் ரம் வகைகளை போன்ற மதுபானங்களை சுவைத்து மகிழும் வாய்ப்பு இந்திய மதுபிரியர்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோன்று கியூபாவில் பிரபல ரம் வகையை (Dark Rum) பெர்னோட் ரிக்காக்ட் குழுமம், ஹவானா கிளப் 7 மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

மது பிரியர்களை திருப்திபடுத்தும் நோக்கில், இதுபோன்ற பரிசார்த்த முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், ரம் தயாரிப்புக்கான செலவு மற்றும் இதன் உற்பத்திக்கான கால அளவை கணக்கில் கொண்டு பார்த்தால், உள்நாட்டு தயாரிப்போ அல்லது வெளிநாட்டு ரம் வகைகளையோ, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு இந்திய நிறுவனங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதே மது விற்பனை சந்தையை சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ரம் தயாரிப்பில் இந்திய நிறுவனங்களுக்கு உள்ள சவால்கள்

இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ரம் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இதற்கான தொழில்நுட்பரீதியான அடிப்படை கட்டமைப்பை ( Primary Distillation) உருவாக்குவதற்கு போதுமான நிதி இல்லாமல் இந்நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

அத்துடன், “ரம் அல்லது விஸ்கி தயாரிப்புக்கு முக்கிய தேவையான அதன் தொழில்நுட்ப ரீதியான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கான உரிமத்தை பெறுவதும் இந்தியாவில் கடினமான விஷயமாக உள்ளது. இத்தகைய சூழலில் ரம் அல்லது விஸ்கி தயாரிப்புக்கு பிற நிறுவனங்களை நம்பி இருந்தால், இவற்றின் தரத்துக்கு இந்திய நிறுவனங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்கிறார் மதுபான உற்பத்தி சந்தையில் நிபுணரான போஸ்.

அத்துடன், விஸ்கியை போலவே ரம்மும் நாளாக நாளாக தான் சுவை கூடியதாக இருக்கும். இதற்காக அது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பீப்பாய்களில் ஊர வைக்கப்பட வேண்டும். இந்த பீப்பாய்கள் செய்யப்படும் மரத்தை பொறுத்து அவற்றை வாங்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகும்.மேலும் இந்த பீப்பாய்களை பாதுகாப்பாக வைத்து பராமரிப்பதற்கான கிடங்குகளை கட்டமைப்பதற்கான செலவும் இதில் உள்ளது.

இப்படி ரம் உற்பத்திக்கான உரிமம் பெறுவது, உள்கட்டமைப்பு வசதிக்கான செலவு என இதில் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உள்நாட்டு ரம் வகைகள், இந்த மதுவை பற்றிய ஆர்வத்தை மதுபிரியர்கள் மத்தியில் பரவலாக தூண்டி உள்ளது. இது உள்நாட்டு மதுபான சந்தை சரியான திசையில் பயணிப்பதற்கான சிறந்த தொடக்கம் என்கிறார் போஸ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.