;
Athirady Tamil News

இலங்கை நாடாளுமன்ற அரசியலால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா..!

0

இலங்கை தீவுக்குள் ஈழத்தமிழர்கள், நாடாளுமன்ற அரசியலுக்குள்ளாலோ, சமாச்சார அரசியலுக்குள்ளாலோ, ஒப்பந்தங்கள், பிரகடனங்கள், புரிந்துணர்வுகள் என எந்த வகையான அரசியல் ஜனநாயக செயற்பாடுகளுக்குள்ளாலும் சிங்கள பௌத்த அரசியல் ராஜதந்திரத்தினை எதிர்கொள்ள, ஈடுகொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளையே மலையாக குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான “இமயமலை பிரகடனம்” (Himalaya Declaration) என்பதன் மூலம் இமயம் என்ற சொல்லின் புனிதத்தையும் கெடுத்து விட்டனர் என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில் ஈழத் தமிழரின் அரசியல் செல்நெறி வரலாற்றை ஆழமாக பார்ப்பதுவும் தமிழ் மக்களுக்கு அது பற்றிய தெளிவை கொடுப்பது அவசியமாகிறது.

ஈழத் தமிழ் அரசியல் பரம்பரியம்
இலங்கை தீவில் ஈழத் தமிழினம் தமது இறைமையை 1621ல் போர்த்துக்கேயரிடம் இழந்து, இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட கோல்புரூக் கேமரூன் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் இலங்கையர்கள் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிக்கும் நிலை 1833இல் ஏற்படுத்தப்பட்டது.

இங்கே ஈழத் தமிழர்களுக்கு 1621ற்கு பின்னர், 212 ஆண்டுகளின் பின்னரே அரசியலில் பங்கேற்க முடிந்தது. சிங்களவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் இறைமையை 1815 இல் இழந்தாலும் கண்டி ராஜ்ஜியத்திற்கான சிறப்புரிமை 1818இல் நீக்கப்பட்டதிலிருந்து 1833இல் அரசியலில் 15 ஆண்டுகளுக்குள்ளேயே அங்கத்துவம் பெற்றுவிட்டனர்.

ஆனால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை வரலாற்றில் 1889இல் தான் முதன்முதலில் அரசியலில் பங்குபெறும் வாய்ப்பு இதே அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் கிடைக்கப்பெற்றது.

சிங்கள பௌத்த சமூகத்தின் அரசியல் ராஜதந்திர பாரம்பரியம் என்பது அறுபடாமல் தொடர்ச்சி குன்றாமல் தொடர் வளர்ச்சிக்குட்பட்டு பேணப்படுகிறது.

ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தின் அரசியல் பரம்பரியம் இரண்டு நூற்றாண்டுகளாக அறுபட்டதன் விளைவாக அழிந்தொழிந்து போய்விட்டது.

சேர். பொன் இராமநாதன்
அரசியல் ராஜதந்திர பாரம்பரியத்தின் அழிவின் விளைவை இன்றுவரை தொடர்வதை காணலாம். சுதந்திரத்திற்காகவும், இழந்த இறைமையை மீட்பதற்காகவும் போராடிய தமிழ்ச் சமூகம் இன்று தனது இலக்கை இழந்து மடைமாற்றப்பட்டு எதிரியின் காலடியில் அடிமைகளாக, சேவகம் செய்யும் அரசியல் தலையெடுத்துள்ளது.

தமிழர் பரப்பில் தமிழர்களின் முக்கிய தொடக்ககால அரசியல் தலைமை என்று பேசப்படுபவர் 1879இல் தமிழர்களின் பிரதிநிதியாக பிரவேசித்த சேர். பொன் இராமநாதன் அவர்களும் அவரைத் தொடர்ந்து அவருடைய சகோதரனான சேர் பொன் அருணாசலம் ஆகிய இருவருமே.

இவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களுடனும் சிங்கள பௌத்த மகாசங்கத்துடனும் பல்வேறுபட்ட உடன்பாட்டுக்கும் சென்றார்கள். ஒப்பந்தங்களையும் செய்தார்கள் கனவான் வாக்குறுதிகளையும் வழங்கினார்கள், ஆனால் அவர்கள் இருவரும் சிங்களவர்களாலும் பௌத்த மகாசங்கத்தாலும் ஏமாற்றப்பட்டார்கள். நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றையே வரலாறு பதிவு செய்திருக்கிறது.

சிங்கள அரசியல் தலைவருடனும் பௌத்த மகா சங்கத்தினரிடமும் பெரும் நிதிப்பங்களிப்பைச் செய்து பௌத்த – இந்து கல்லூரிகளை திறக்கப் புறப்பட்ட இராமநாதன் ஏமாற்றப்பட்டு பௌத்த கல்லூரிகளை மட்டுமே திறக்க வாய்க்கால் வெட்டிவிட்டார்.

அத்துடன், சிங்களத் தலைவர்களால் முதுகில் குத்தப்பட்டதன் வெளிப்பாடு அவர் யாழ்ப்பாண நோக்கி புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் இரண்டு இந்து பாடசாலைகளை திறந்தார் என்பதையும் தமிழ் அரசியல் செல்போக்கில் மறந்துவிட முடியாது.

தமிழரசு கட்சி
அதுமட்டுமன்றி சிங்கள தலைமைகளுடன் இணக்க அரசியல் நடத்தி சம அந்தஸ்தை பெறலாம் என்று சிங்களவர்களுக்காகவே உழைத்த இராமநாதன், 1929 டொனமூர் அரசியல் யாப்பு நகலை சிங்கள தலைமைகள் மற்றும் ஆங்கிலேயருடன் கூட்டுச்சேர்ந்து உருவாக்கினார்.

அந்த யாப்பில், “டொனமூர் என்பது இனிமேல் தமிழர் இல்லை” என்று குறிப்பிட்டமையானது டொனமூர் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தால் இலங்கை அரசியலில் தமிழர்களுக்கு இடம் இல்லை என்பதை அன்றைய அவருடைய கூற்று வெளிப்படுத்தி நின்றதன் மூலம் அவரது அரசியற் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலமாக அது அமைந்தது.

தொடர்ந்து இலங்கை அரசியலில் தமிழ் தலைவராக ஒற்றையாட்சிக் கொள்கையுடன் ஜி.ஜி.பொன்னம்பலம் வந்தார். 50 க்கு 50 என்று கோசமிட்டு 14 மணித்தியாலங்கள் பேசி எதையும் சாதிக்கவில்லை.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று முழக்கமிட்டவர் இறுதியில் டி.எஸ் சேனநாயக்காவின் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவி பெற்றதுதான் மிச்சம், அரசியல் உரிமைகள் எதுவும் தமிழருக்குக் கிடைக்கவில்லை.

பொன்னம்பலம் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எனக்கூறி அவரது ஒற்றையாட்சிக் கொள்கைக்கு மாறாக. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து எஸ். ஜே. வி செல்வநாயகம் தமிழரசு கட்சியை உருவாக்கினார்.

அமிர்தலிங்கம்
சமஷ்டியை உருவாக்கப் போவதாக புறப்பட்டு பின் அதிலிருந்து இறங்கி பண்டாரநாயக்காவுடன் பிராந்திய சபைகள் அமைக்க ஒப்புக்கொண்டு அதுவும் தோல்வியில் முடிந்தது.

பின்பு அப்பிராந்திய சபைகளைவிடவும் அதிகம் கீழ் இறங்கி டட்லி சேனநாயக்காவுடன் மாவட்டசபைகள் ஒப்பந்தங்களை செய்து எதனையும் சாதிக்க முடியாது தோல்வி அடைந்தார்.

இறுதியில் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட எஸ் ஜே வி “தமிழர்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தன் இயலாமையை வெளிப்படுத்தி அரசியலில் மரணித்து போய்விட்டார்.

செல்வநாயகத்துக்கு பின் வந்த அமிர்தலிங்கத்தினால் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் பிரம்மாண்டமான பேச்சுப் போட்டியை நடத்த முடிந்தது.

இந்தப் பேச்சுக்கள் ஒலி வடிவில் கேட்டு பாடசாலை மாணவர்கள் ஆங்கில பேச்சுப் போட்டிக்குப் பயிற்சிபெற உதவக்கூடியதே தவிர தமிழர் அரசியல் உரிமைக்கு உதவவோ, எதனையும் பெற்றுக் கொடுக்கவோ உதவவில்லை.

தமிழ் அரசியலின் இயலாமை
ஒற்றையாட்சி கொள்கை பிழை என்ற முடிவுக்கு வர தமிழ் காங்கிரசிற்கு 1944ஆம் ஆண்டிலிருந்து சுமாராக கால்நூற்றாண்டுக்கு மேற் தேவைப்பட்டது. அதற்குள் தமிழரை வரலாறாறு வெகுததூரம் கௌவ்விக் கடந்துவிட்ட பரிதாபம்தான் மிஞ்சியது.

அடுத்து சமஷ்டி கேட்டு, பிராந்திய சபைக்கு இறங்கி, மேலும் மாவட்ட சபைக்கு இறங்கி, இடையில் தனிநாடு கேட்டு, பின்பு மேலும் அதிகம் இறங்கி மாவட்ட அபிவிருத்தி சபை கேட்டு, இறுதியில் கிராம சபைகூட சிங்கள தலைமைகளிடமிருந்து ஈழத் தமிழர்களுக்காக பெற முடியவில்லை என்பதே நாடாளுமன்ற அரசியற் பயணத்தின் பரிதாபநிலை.

இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் தலைவர்களாலோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளினாலோ ஒரு சட்டமூலத்தைத்தானும் கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை என்பது மாத்திரமல்ல ஒரு மசோதாவைத்தானும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை.

இலங்கை நாடாளுமன்ற அரசியலில் தமிழர்களால் மாவட்ட சபைகள் என்ற வெள்ளை அறிக்கை ஒன்றை மாத்திரமே திரு. மு திருச்செல்வம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வாசிக்க முடிந்தது.

இவ்வாறான துயரகரமான அவமானகரமான இயலாமையைத்தான் நாடாளுமன்ற அரசியலில் தமிழ் மக்களால் அறுவடை செய்ய முடிந்தது என்பதை தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழர்களால் அதிகூடியதாக பெறக்கூடிய 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு எதனையும் சாதித்திட முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு
எனவே இதனைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் அந்த நாடாளுமன்ற அரசியலை எவ்வாறு சிக்கலுக்கு உள்ளாக்கலாம்? எவ்வாறு எதிரிகளை சிக்கலுக்கு உள்ளாக்கலாம்? சிக்கலுக்கு உள்ளாக்குவதன் மூலம் எவ்வாறு நிர்பந்தத்துக்கு உள்ளாக்க முடியும்? அந்த நிர்பந்தத்திற்கு ஊடாக எதனை பெற முடியும்? என்பதை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டுமே அன்றி நாடாளுமன்றத்துக்குள் சென்று பேச்சுப் போட்டிகளையும், விவாத அரங்குகளையும் அரங்கேற்றுவதில் எந்தப் பயனும் கிடையாது.

தமிழ் மக்கள் தமிழ் தலைவர்களுக்கு கொடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்கு என்பது தமிழ் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதற்கு மட்டுமே. நாடாளுமன்ற உறுப்புரிமை என்பது போராடுவதற்கான அனுமதிப்பத்திரம் என்பதாகவே அமைய வேண்டும்.

அதனை தமிழ் தலைவர்கள் தம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து அந்த கால அரசியல் தலைவர்களின் வழியில் நாடாளுமன்றத்துக்குள் வீரப்பிரதாபங்களை வெளியிடுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்பட வேண்டும்.

அவ்வாறு ஒருவர் ஆக்ரோஷமாக பேசுகிறார் என்றால் அது தமிழ் சினிமாவில் வருகின்ற நம்பியார் பாத்திரமாகவே அமைய முடியும். அல்லது சிவாஜி கணேசனின் பிரமாதமான நடிப்பாகவே அமைய முடியும்.

ஆனாலும் விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி இலங்கை ஜனநாயக நாடாளுமன்ற அரசியலுக்குள் தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்கு ஒரு களமாக பயன்படுத்தினார்கள் என்பது மட்டுமல்ல.

அன்றைய காலத்தில் சர்வதேச அரசியல் அழுத்தமும் விடுதலைப் புலிகளின் பின்னேதான் தமிழ் மக்கள் அணி திரண்டு இருக்கிறார்கள் என்பதையும் உலகத்துக்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டதனாலேயே நாடாளுமன்ற அரசியலை ஒரு போராட்ட வடிவமாக சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தொடங்கினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் இலங்கை நாடாளுமன்ற அரசியலுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என்று அணுவளவும் எண்ணியது கிடையாது.

அதைவேளை நாடாளுமன்ற அரசியலை அவர்கள் ஒருபோதும் ஆதரித்ததும் கிடையாது. முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் என்பது எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது.

நாம் இறுதியில் எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டோமோ அங்கிருந்துதான் அடுத்த கட்ட போராட்டம் தொடரப்பட வேண்டும்.

வரலாற்றின் கட்டளை
ஆகவே தமிழ் மக்களுடைய அடுத்தகட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் இருந்து, முள்ளிவாய்க்கால் தந்த பேரவலத்திலிருந்து, அந்தப் பேரவலம் தந்த இனப்படுகொலையை முதலீடாகவும், அடித்தளமாகவும் கொண்டுதான் அரசியல் தொடக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் அதுதான் நடக்கவில்லையே. மாறாக மீண்டும் பழையபடி நாடாளுமன்ற அரசியலுக்கு சம்பந்தன் தலைமை தாங்கி ”நல்ல காரியங்கள் நடக்கும்” ”தீபாவளிக்கு தீர்வு வரும்” ”தைப்பொங்கலுக்கு தீர்வு வரும்” என தமிழ் மக்களை நம்ப வைத்து மரணப் படுக்கைக்குச் சென்றுவிட, இன்று தமிழரசு கட்சியின் தலைமைத்துவ போட்டிக்கு இப்போது மூவர் வாளெடுத்து போர் செய்யும் நிலையில் தமிழர் தாயக அரசியல் வந்து நிற்கிறது.

தமிழ் மக்கள் தம்மை அறிவார்ந்த ரீதியில் அரசியல் ராஜதந்திர வழிமுறைக்கூடாக பயணிக்கூடிய அனைத்து பாதைகளுக்கும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும், எதிராகவும் பல தீயசக்திகள் தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரினால் அவருடைய தேசிய இலட்சியத்துக்கு மாறான பாதையில் அவருடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவருடைய தியாகத்தை மறுதலிக்கும் வகையிலும் செயற்படத் தொடங்கிவிட்டனர்.

அதே நேரத்தில் தாராண்மை வாதம், மனித உரிமைகள், ஐக்கியம், ஜனநாயகம் என்ன பேசும் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசுடனும் பௌத்த சங்கங்களுடனும் சமாச்சார உடன்பாட்டுக்கும் ஒத்துழைப்பிற்கும் செல்லத் தலைபடுகின்றனர். அண்மையில் வெளியாகிய இமயமலை பிரகடனம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இராமநாதன் தொடக்கம் சம்பந்தன் வரை மேற்படி அனைத்து வழிகளையும் கையாண்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உள்ளாலோ அல்லது நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாலோ அல்லது இலங்கையின் நீதித்துறையின் நீதியின் பார்ப்பட்டோ அல்லது ஒப்பந்தங்கள் வாக்குறுதிகளின் அடிப்படையிலோ இலங்கை சிங்கள பௌத்த அரசிடம் இருந்து தமிழ் தேசிய இனம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை வரலாறு நிரூபித்து இருக்கிறது.

எனவே இலங்கை தீவுக்குள் சுயமான கௌரவமான அரசியல் உரிமைகளை பெற்று வாழ வேண்டுமானால் அவர்கள் பூகோளம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகளை ஆழமாக அவதானித்து அதற்கு ஏற்ற வகையில் அணிகளை அமைத்து செயற்பட்டால் மாத்திரமே தமக்கான இலக்கினை அடைய முடியும்.

இந்த பிரபஞ்சத்தில் யாரும் முழு நேர நண்பன் கிடையாது. அனைவரும் பகுதி நேர நண்பர்களே என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய அணிகளில் அந்தந்த காலங்களில் பொருத்தமான தருணங்களில் தங்களை இணைத்து தமது தேசிய விடுதலைக்கான அரசியல் பயணத்தை தொடர வேண்டுமென வரலாறு தமிழ் தேசிய இனத்திற்கு கட்டளையிடுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.