;
Athirady Tamil News

மூத்த தலைவர் அலி லார்ஜானி, மகள் – மகனுடன் கொல்லப்பட்டார்! உறுதிசெய்தது ஈரான்!

0

மூத்த தலைவர் அலி லார்ஜானி தனது மகள், மகனுடன் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடந்த பிப். 28 தொடங்கி 19 நாள்கள் கடந்துள்ள நிலையில், ஈரான் ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் மூத்த தலைவர்களைக் குறிவைத்து தாக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் 3-வது வாரமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலர் அலி லார்ஜானியைத் தங்கள் படைகள் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், அதனை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

அலி லார்ஜானியுடன் சேர்த்து ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் தன்னார்வ பாசிஜ் போராளிக் குழுவை வழிநடத்திய குலாம்ரெசா சுலைமானியையும் திங்கள்கிழமை இரவு கொல்லப்பட்டார். அலி லாரிஜானியின் மரணம் குறித்த இஸ்ரேலின் கூற்றுகளுக்கு ஈரான் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது.

இந்த நிலையில், அலி அயத்துல்லா கமேனியின் மரணத்துக்குப் பிறகு, ஈரான் தலைமையில் செல்வாக்குமிக்க நபராகக் கருதப்பட்ட அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

கமேனி ஆட்சி நிர்வாகத்தில் அவருக்கு நெருக்கமானவராக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அலி லாரிஜானி முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாலும், அதிகார அமைப்புடன் அதிருப்தியை வெளிப்படுத்தும் குழுக்களுடனும் நட்புறவைக் கொண்டவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே பர்த்திஸ் என்ற இடத்தில் தனது மகள் வீட்டில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தாக்குதலில் லார்ஜானியின் மகன் மோர்டெசா லார்ஜானி, அவருடன் சேர்த்து துணைத் தலைவர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதை ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து நடத்திய கூட்டுத்தாக்குதலில் பிப். 28-ல் ஈரானின் மதகுருவும் உச்சத்தலைவருமான அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார். அவருடன் சேர்த்து 45-க்கும் மேற்பட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாவது இடத்தில் இருந்த லார்ஜானியும் கொல்லப்பட்டதால், அமெரிக்கா, இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.