;
Athirady Tamil News

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் கனி கொடுப்பதாக அமைய வேண்டும்!

0

இலங்கையின் மிக முக்கிய புனித மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றான அநுராதபுரம் மீண்டும் ஒரு முறை முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இம்முறை வெறும் ஆன்மீக தலைநகராக மட்டுமல்லாமல், பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான உந்து சக்தியாகவும் மாறியுள்ளது.

இந்த பண்டைய நகருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கொண்ட விஜயமானது, ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிப்பதுடன் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார முக்கியத்துவம் நிறைந்ததாகவும் அமைகிறது.

என்றாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல திருப்புமுனைகளுக்கு மத்தியில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா? அல்லது அதனை மீண்டும் நழுவ விடும் நிலையில் இருக்கிறோமா? என்ற ஒரு முக்கியமான கேள்வி எம் முன்னே மீண்டும் எழுகின்றது.

மகத்தான சமய மற்றும் தொல்பொருள் பெறுமதிகளுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறை விளக்கப் படிவத்தில் அநுராதபுரம் மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் 2,053,456 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளில் கூறப்படுகிறது. இதில் 72,855 பேர் மட்டுமே வெறும் 3.55வீதம் – அநுராதபுரத்தை பார்வையிட சென்றிருந்தனர்.

அதற்கு எதிர்மாறாக பொலன்னறுவை 204,834 (9.97 வீதம்) பார்வையாளர்களைக் கவர்ந்த அதேவேளை, சிகிரியா 508,653 (24.77 வீதம்) சுற்றுலா பயணிகளை வரவேற்றிருந்தது. இது ஒரு மிகத் தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிபரங்கள் ஒரு சங்கடமான உண்மைத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. அதன் சக பாரம்பரிய சமய தலங்களைப் போன்று, அர்த்தமுள்ள முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவோ அல்லது சுற்றுலாத்துறை மையமாகவோ அநுராதபுரம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.

இந்தப் பின்னணியில், அநுராதபுரத்தை ஒரு ஆன்மீக தலமாக மட்டுமல்லாமல், தெற்காசியாவின் கலாசார மற்றும் சுற்றுலா வரைபடத்திற்குள் ஒரு சுறுசுறுப்பான இடமாக மாற்றுவதற்கு மிகச் சரியான நேரத்திற்குரிய தளத்தை மோடியின் வருகை அமைத்துக்கொடுத்துள்ளது.

இந்தத் தருணமானது சம்பிரதாய நிகழ்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது அநுராதபுரம் எவ்வாறு முன்னேற்றப்படுகிறது, அனுபவிக்கப்படுகிறது மற்றும் நிலைநிறுத்தப்படுகிறது என்பவற்றில் ஒரு மூலோபாய மாற்றத்தை ஊக்குவிப்பது அவசியமாகும்.

இந்தியாவின் விரிவடைந்து வரும் வெளிச்செல்லும் சுற்றுலாத்துறை சந்தையுடன் இணைந்து, கதைகள் கூறும் கலையம்சம், ஆழ்ந்த அனுபவங்கள், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், கலாசார கௌரவத்தை பொருளாதார ஜீவசக்தியுடன் கலக்கக்கூடிய ஒரு புதிய அத்தியாயத்தை அநுராதபுரத்தினால் ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும்.

ஓர் அரிய ராஜதந்திர மற்றும் பொருளாதார சாளரம்

அநுராதபுரத்திற்ககான பிரதமர் மோடியின் விஜயம் வெறும் அரசியல் ஈடுபாடு அல்ல. அது மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்டதாகவும், அடையாள ரீதியாக வளமானதாகவும், ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. விசேடமாக அமைக்கப்பட்ட சர்வதேச விமான ஓடுபாதை வழியாக அநுராதபுரத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட அவர், அநுராதபுரம் ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் மட்டுமல்ல, எதிர்கால நகரம் என்ற செய்தியையும் உறுதிப்படுத்தினார். தற்காலிக குடிவரவு மற்றும் குடியகல்வு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் அநுராதபுரம் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நாள் சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு பலமான தவலைக் கொடுத்தது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலட்சாதிபதிகளையும் ஆன்மீக மற்றும் கலாசார சுற்றுலாவின் மீது ஏக்கத்துடன் எப்போதும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்ட நாடான இந்தியா, இப்போது அநுராதபுரத்தைப் பற்றி அறிந்துகொண்டுள்ளது. இந்த நகரம் உத்தியோகபூர்வமாக இந்திய பொதுமக்களின் உணர்வுகளுக்குள் நுழைந்து இந்தியர்களைப் போன்று சர்வதேச பயணிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஆன்மீக இடமாக அதை நிலைநிறுத்துவதற்கான ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் பூம் எனும் தொடக்க ஏற்றத்தில் இருந்து படிப்பினைகள்

மூலோபாய முதலீடு மூலம், குறிப்பாக ஸ்டார்ட்-அப் துறையில், இந்திய மாதிரி பொருளாதார புத்துணர்ச்சி, முன்மாதிரியான படிப்பினைகளை வழங்குகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும், இந்தியாவில் 6,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் – அப் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல அரசாங்கத்திடமிருந்து 50% வரை ஆரம்ப நிதி உதவியைப் பெற்றன. மீதமான மூலதனம் குறைந்த வட்டி கடன்கள் மூலம் வழங்கப்பட்டது. அநுராதபுரத்தில் – குறிப்பாக சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களில் – அத்தகைய மாதிரியை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கிறது.

இந்திய தொழில்முனைவோரையும் இலங்கையிலுள்ள புத்தாக்கத்துறையினரையும் அழைத்து பொருளாதார – சுற்றுலாத்துறையில் கூட்டு அபிவிருத்தி முயற்சிகள், விருந்தோம்பல், நல்வாழ்வு சிந்தனைகள், பாரம்பரிய நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டம் ஒன்று அநுராதபுரத்தில் நடத்தப்பட்டதாக கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடைபெறுமாக இருந்தால் முன்னாள் இராஜதானி அநுராதபுரத்திற்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் அது மிகப் பெரிய பலனைத் தரும் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.

சுற்றுலாத்துறை திட்டமிடல்: ஒரு தொடர்ச்சியான பார்வையற்ற இடம்

துரதிர்ஷ்டவசமாக பல உள்ளூர் அதிகாரிகளால் சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அது பெரும்பாலும் வீதிகள் அமைத்தல், பிரசுரங்களை அச்சிடுதல் அல்லது குறைந்த தாக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற சாதாரண யோசனைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. ஆனால் உண்மையான சுற்றுலாத்துறை திட்டமிடல் என்பது மிகவும் நுட்பமானதும் நுணுக்கமானதுமாகும். இது நீண்டகால உபாயம், இடத்தை நோக்கிய குறியீடு இடல், பங்குதாரர் ஈடுபாடு, நிலைத்தன்மை பரிசீலனைகள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, சமகால பயணிகளின் உளவியல் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் பிராந்திய சுற்றுலாத்துறை வாய்ப்புகளை இணைக்க வடிவமைக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச சுற்றுப்பயண கண்காட்சிகள், சுற்றுலாத்துறை கண்காட்சிகள் போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளில் பங்குபற்றல்கள் இல்லாததே மூலோபாய சுற்றுலாத்துறை சிந்தனையில் நிலவும் மிகத் தெளிவான இடைவெளியாகும்.

பாரம்பரிய பிரசுரங்கள் மற்றும் கண்காட்சி அரங்குகளுக்கு அப்பாற்பட்ட, கவர்ச்சிகரமான கதைகள், கலாசார தொடர்புகள் மற்றும் ஆழமான அனுபவங்கள் மூலம் இலக்குகளை வழங்க ஒரு தனித்துவமான இடத்தை இத்தகைய நிகழ்ச்சிகள் கொடுக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த வாய்ப்புகள் அடிக்கடி கவனிக்கப்படாமல் போகின்றன.

மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் தொலைநோக்கு சிந்தனை அணுகுமுறையுடன், அனுராதபுரத்தை ஓர் ஆன்மீக மற்றும் முதலீட்டு இடமாக நிலைநிறுத்த அத்தகைய தளத்தைப் பயன்படுத்தியிருக்கலாம், குறிப்பாக பிராந்திய பயணிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு அத்தகைய தளத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். கூர்மையான பார்வை, கதை சொல்லல், தந்திரோபாய ஈடுபாடு ஆகியவற்றிலேயே நவீன சுற்றுலாத்துறையின் வெற்றி தங்கியிருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ளாதது ஒரு விசாலமான சிக்கலை பிரதிபலிக்கிறது.

தொடர்ச்சியாக தவறவிடப்படும் திட்டங்கள்

குறைவான பயன்பாடு மற்றும் மோசமான நிலைப்பாட்டின் சுழற்சியிலிருந்து விடுபட அநுராதபுரம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடி வருகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தள அந்தஸ்து அநுராதபுரத்திற்கு இருக்கின்றபோதிலும் அந்த நகரம் தன்னை உலகளவில் போட்டித்தன்மை மிக்க இடமாக முன்னிறுத்தத் தவறிவிட்டது. அதன் மதிப்பை அதிகரிக்கச் செய்யும் பெரிய அளவிலான அரச – தனியார் கூட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லை.

கலாசார சிந்தை நிலையங்களை நிறுவுவதற்கு பெரிய சர்வதேச ஹோட்டல் சங்கிலிகளும் அழைக்கப்படவில்லை. பௌர்ணமி பூரணை தினங்களையோ அல்லது தொல்பொருள் அற்புதங்களையோ உள்ளடக்கிய உலகளாவிய தரத்திலான எந்த விழாக்களும் உருவாக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுற்றுலாத்துறை ‘வெறும் உள்ளூர் விவகாரம்’ என்ற காலம் கடந்த கருத்து நமது கூட்டு கற்பனையை தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது.

பாரம்பரிய சுற்றுலாத்துறை அம்சங்கள் ஒரு புறம் இருக்க, முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லாததால், இவ்வளவு பிரபல்யம் மிக்க ஒரு நகரம் தொடர்ச்சியாக கைவிடப்பட்டுவருவது வேதனை அளிக்கிறது. இலச்சினைகள், சுலோகங்கள், கையொப்பமிடும் நடவடிக்கைகள் போன்ற சாதாரண அடிப்படை முயற்சிகள் நவீன சுற்றுலாத்துறை போக்குகளிலிருந்து விடுபட்டுள்ளன அல்லது துண்டிக்கப்பட்டுள்ளன.

அரசியல் விருப்பமும் ஊடக பங்கேற்பும் : ஒரு முக்கியமான இடைவெளி

மோடியின் விஜயத்தின் போது, அநுராதபுரத்தின் நிலைமாற்றம் தொடர்பாக நாடு தழுவிய நடவடிக்கையை ஆரம்பிக்கும் வாய்ப்பை வலுவான ஊடக பின்புலத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி போன்ற தேசிய அரசியல் அமைப்புகள் பற்றிப்பிடித்துக்கொள்ளும் என பலர் கருதினர். ஆனால் அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. மாறாக அந்த நிகழ்வு இராஜதந்திர வட்டாரங்களுக்கு அப்பால் குறைந்தபட்ச பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

எவ்வாறாயினும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதையும் உலகின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவருக்கு அநுராதபுரம் நகரை புறப்பாடு இடமாக ஏற்படுத்திக்கொடுத்ததையும் உறுதிசெய்தற்கான பாராட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கே சேரவேண்டும்.

அவரது எண்ணம் ஒரு சிறந்த சமிக்ஞையாக இருந்ததைவிட சக்தி வாய்ந்ததாக இருந்ததுடன் அதனை நாங்கள் பயன்படுத்துவதற்கான தூரநோக்கு பார்வையின் தளத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் அமைந்தது.

செயல்பட வேண்டிய நேரம் : எதிர்காலத்திற்கான ஒரு பிரேரணை

அநுராதபுரத்திற்கு இப்போது தேவைப்படுவது வெறும் உத்வேகம் மட்டுமல்ல – அமுல்படுத்தல் ஆகும். இப்போது எடுக்க வேண்டிய ஐந்து உடனடி நடவடிக்கைகள் இதோ:

1. அநுராதபுரத்தில் ஒரு இந்திய – இலங்கை முதலீட்டாளர் கூட்டத்தை நடத்துங்கள்

சுற்றுலாத்துறை, விவசாயம் மற்றும் சேவைகளில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க இந்திய தொழில்முனைவோர் மற்றும் துணிச்சல் மிக்க முதலீட்டாளர்களை அழைக்க வேண்டும்.

2. சுற்றுலாத்துறை புத்தாக்க காப்பகத்தை ஸ்தாபித்தல்

நிதி உதவி, வழிகாட்டுதல் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகலுடன் உள்ளூர் தொடக்க நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும்.

3. 2025–2030க்கான ஒரு மூலோபாய சுற்றுலாத்துறை திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

சர்வதேச நிபுணர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் உள்ளீடுகளுடன், ஆன்மீக சுற்றுலா, சமய சுற்றுலா, நல்வாழ்வு சுற்றுலா, கலாச்சார விழாக்கள் மற்றும் டிஜிட்டல் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டித் திட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

4. பருவகால சர்வதேச நுழைவிடமாக அனுராதபுரம் விமான நிலையத்தை செயல்படுத்த வேண்டும்.

உச்ச புனித யாத்திரை காலங்களில் பிரத்தியேக ஏற்பாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தற்போதுள்ள உட்கட்டமைப்பு மற்றும் அரசியல் முன்னுதாரணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

5. பயண இலக்கை நோக்கிய பிராண்டிங் மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தலில் முதலீடு செய்யுங்கள்.

இந்திய, தென்கிழக்கு ஆசிய மற்றும் மேற்கத்திய ஆன்மீக பயணிகளை கவரும் வகையில் அநுராதபுரத்திற்கான ஒருங்கிணைந்த குறியீடு அடையாளத்தை உருவாக்க உலகளாவிய முகவர் நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

அநுராதபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுச்சூழலில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் மூலம் ராஜதந்திர மற்றும் பொருளாதார வாயில் திறக்கப்பட்டுள்ளது. அந்த வாயில் நீண்ட காலம் திறந்திருக்கும் என கருதமுடியாது. சாத்தியக்கூறுகள் சிறப்பாக இருக்கின்றபோதிலும் முன்னெச்சரிக்கை திட்டமிடல், படைப்புக்கான ஊக்குவிப்பு மற்றும் தொலைநோக்குத் தலைமைத்துவம் இல்லாதது நகரத்தை தவறவிட்ட வாய்ப்புகளின் சுழற்சிக்குள் மீண்டும் இழுத்துச் செல்கிறது.

எனவே தாமதிக்காமல் செயற்படவேண்டிய நேரம் இதுவாகும். உலகமே நோக்கிக் கொண்டிருக்கிறது, இந்தியா செவிமடுத்துக்கொண்டிருக்கிறது, அநுராதபுரம் தயாராக இருக்கிறது. எனவே, நாம் புத்திசாலித்தனமாக இருந்தால் மாத்திரமே எம் முன்னே உள்ள பாதையைப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

– பேராசிரியர் மனோஜ் சமரதுங்க

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம், மிகிந்தலை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.