அடுத்த தேர்தல்?

ரொபட் அன்டனி
ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்றம் என மூன்று தேர்தல்கள் நடைபெற்றுவிட்டன. அடுத்து எப்போது மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்பதே இப்போது கேள்வியாக இருக்கின்றது. மாகாண சபை தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறும் என்பது அரசாங்கத்தின் முன்னைய நிலைப்பாடாக இருந்தது. தற்போது இந்த உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முடிவு எவ்வாறு எடுக்கப்படும் என்பது பார்க்கவேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, தேர்தலை நடத்துவதில் சட்டரீதியான சில சிக்கல்கள் காணப்படுகின்றன. அவற்றையும் நீக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சில நடவடிக்கைகள் எடுத்ததன் பின்னரே மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்.
ஆரம்பத்தில் இந்த வருட இறுதியில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். யாழ்ப்பாணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மாகாண சபை தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அடுத்த வருட ஆரம்பத்திலேயே மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறுவது அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு தடையாக அமையும் என்பதாலும் இந்த வருடம் ஒரு தேர்தல் நடைபெற்றுவிட்டதால் அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்ற வகையிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அரசாங்கத்தின் தரப்பில் எப்போது இந்த தேர்தல் நடத்தப்படும் என்பது தொடர்பான ஒரு இறுதியான முடிவு எடுக்கப்படாத நிலைமை தென்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அரசாங்கமும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக சாதகமான சமிக்ஞையை இந்தியப் பிரதமரிடம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
எனினும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் பின்னடைவை அரசாங்கம் சந்தித்துள்ளது. அதேபோன்று தென்னிலங்கையிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றதை விட வாக்கு சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது.
அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் ஒரு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துமா அல்லது பல முன்னேற்றங்களை ஏற்படுத்திவிட்டு பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இது அரசியல் ரீதியாக அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு. அதனை அரசாங்கம் எவ்வாறு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எப்படியிருப்பினும், தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படும் என்பதை தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
மறுபுறம் மாகாண சபை தேர்தல் தொடர்பான ஒரு சட்டச் சிக்கல் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு 50 வீத தொகுதி மற்றும் 50 வீத விகிதாசாரம் என்ற அடிப்படையில் மாகாண சபை தேர்தல் முறை மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தினால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது. எனவே, ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை மாற்றியமைத்து புதிய முறைமையில் தேர்தல் நடத்த வேண்டும்.
அல்லது பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றி பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும்.
கடந்த பாராளுமன்றத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பாக ஒரு தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அந்த தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தால், மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு வழி பிறந்திருக்கும்.
ஆனால் கடந்த பாராளுமன்றத்தில் அந்த பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர், தற்போதைய புதிய பாராளுமன்றத்தில், தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இது தொடர்பில் ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றார்.
அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பழைய முறைமையில் தேர்தலை நடத்தலாம். அல்லது எல்லை நிர்ணய அறிக்கையை மீண்டும் திருத்தம் செய்து, நகர்வுகளை மேற்கொண்டு புதிய அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதாவது திருத்தப்பட்ட அறிக்கையை முன்வைத்து அது நிறைவேற்றப்பட்டால், தேர்தலை புதிய முறைமையில் நடத்தலாம்.
தற்போதைய சூழலில் பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு கட்சிகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. கட்சிகளின் நகர்வுகளை பார்க்கும்போது இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தற்போது பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை ஆளும் கட்சியும் செய்யலாம் அல்லது வேறு எந்த உறுப்பினரும் செய்யலாம். எனவே சாணக்கியன் எம்.பி. முன்வைத்திருக்கின்ற அந்த பிரேரணையை பரிசீலனை செய்ய முடியும்.
தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல்கள் தாமதப்படுத்தப்படக்கூடாது. ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் என இலங்கையில் நான்கு வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றின் ஊடாக மக்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துகின்றனர். தமது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர். தேர்தல் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற மிக முக்கியமான ஒரு ஜனநாயகச் செயல்பாடு என்பதையும் தாண்டி, ஒரு நாட்டின் எதிர்காலத்தை அதன் தலைவிதியை தீர்மானிக்கின்ற ஒரு செயல்பாடாக அமைகிறது.
அதுமட்டுமின்றி, ஜனநாயகத்தின் நிலையை அளவிடுகின்ற, மதிப்பிடுகின்ற ஒரு மதிப்பீடாகவும் இந்த தேர்தல் காணப்படுகிறது. எனவே தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
எந்தவிதமான வன்முறையும் அழுத்தங்களும் இன்றி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் ஜனநாயக முறையில் தமது மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சூழலை உருவாக்குவது அவசியம் ஆகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் தேர்தலில் ஆர்வமாக வாக்களிப்பார்கள். மக்கள் 80 வீதத்தை தாண்டி வாக்களிப்பார்கள். ஆனால் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மிகவும் குறைவான வாக்களிப்பு வீதம் பதிவாகி இருந்தது. வழக்கமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்கு வீதம் குறைவாக இருக்கும். ஆனால் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு வீதம் மிக அதிகமாகவும் உயர்வாகவும் இருக்கும். அதுதான் இலங்கையின் வரலாறாக இருந்து வருகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள் மிக முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றன. காரணம், வடக்கு கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுவதற்கான ஆரம்பமாகவே இந்த மாகாண சபை தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த 13 ஆவது திருத்த சட்டத்திற்கமைய மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபை இணைந்ததாக காணப்பட்டது. எனினும், 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபைகள் பிரிக்கப்பட்டன. தற்போது வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் ஒன்பது மாகாண சபைகள் காணப்படுகின்றன.
கிழக்கு மாகாண சபைக்கு 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தல் நடைபெற்றது, பின்னர் 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைக்கப்பட்டது. அதேபோன்று, வடக்கு மாகாண சபைக்கு 2013 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அங்கும் ஆட்சி அமைக்கப்பட்டது. அதன் பின்னர், இரண்டு மாகாண சபைகளிலும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகமொத்தமாக, 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் எந்தவொரு மாகாண சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில், இந்த மாகாண சபை முறையானது ஒரு தீர்வின் ஆரம்பமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இந்த மாகாண சபை முறை ஊடாக தமது அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை வலியுறுத்துகின்றனர். ஆனாலும் கூட, இந்த மாகாண சபை முறை தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. எனவே அதனைத் தவிர்க்க முடியாது.
நாட்டைப் பொறுத்தவரையில் பொதுவாக மாகாண சபை தேர்தல்கள் எவ்வளவு முக்கியமோ, அதே போன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் மாகாண சபை என்பது மிக முக்கியத்துவமிக்கது. எனவே மாகாண சபைக்கு தேர்தல் நடத்துவது மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது. அதாவது, இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலேயே மாகாண சபை தேர்தலை நடத்தி ஆக வேண்டும். அதில் தாமதம் இருக்கக் கூடாது. இந்த விடயத்தில் மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
இது குறித்து அண்மையில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
‘’ மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள், இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெறும்பான்மை போதுமாகும். குறித்த பிரேரணையை ஆளுங்கட்சியே செய்ய வேண்டும் என்றில்லை. பாராளுமன்றில் எவரும் கொண்டு வரலாம்’’ என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அச்சுதன் கூறுகிறார்.
எனவே, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடுத்த கட்ட நகர்வுகளில் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. அரசாங்கம் மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தாது என்று தற்போது எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இந்த வருடம் நடைபெறும் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் என்ற கருத்து அரசாங்கத் தரப்பில் வெளியானது. எனவே என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கமாக தற்போதுள்ள ஆட்சி காணப்படுகிறது. எனவே எந்தவொரு சட்ட திருத்தத்தையும் பாராளுமன்றத்தில் செய்து தேர்தலை பழைய முறைமையில் உடனடியாக நடத்தலாம். எனவே அரசாங்கம் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது ?