;
Athirady Tamil News

கண்டுபிடிக்கப்படாத நாட்டின் முக்கிய நடவடிக்கை

0

லக்ஸ்மன்

அதிகாரம் எவற்றையெல்லாம் செய்யும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் இப்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் இருக்கின்றன. அந்த ஒழுங்கில்தான், கடந்த வாரத்தில் பெரும் களேபரம் ஒன்று விஜேராம மாவத்தையில் நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்தக் களேபரத்துக்குக் காரணமாக இருந்தது.

அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷ மாத்திரமே அரச மாளிகையில் வசித்துவந்தார் என்பதான ஒரு பிம்பமும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணமிருக்கின்றன.

இந்த விமர்சனங்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்யும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்களின் எதிர்கால அரசியலைப் பற்றியதாகவே இருக்கிறது. இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது உண்மையில் அரசியலேயாகும்.

இருந்தாலும் கட்சிகள் மேற்கொள்ளும் முடிவுகளின் அடிப்படையில் சட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருப்பது வழமையாகும் என்பதும் யதார்த்தமாகும்.நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முடிவினை மக்கள் எடுத்த வேளையில் அனுர தரப்பு முன்வைத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும்
நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

இருந்தாலும் அவர்களுடைய அரசியல் செயற்பாடு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து தொடங்கியது என்பது நினைவில் இருத்தப்பட்டிருக்கவுமில்லை.

இப்போதுதான், 70களில் நாட்டை ஆட்சிப்படுத்தும் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சியில் தொடங்கப்பட்ட விடயங்கள் இப்போது நடைபெறுகின்றன என்பதனை நாம் மனதில் இருத்திக் கொண்டால் எவருக்கும் நடைபெற்று வருகின்ற விடயங்களில் கவலை எற்பட வாய்ப்பில்லை.

ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவர்களைச் சிறையிலடைப்பதும், முன்னாள் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பறிப்பதும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியே. இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தின் அளவு நம் நாட்டிற்குச் செழிப்பை ஏற்படுத்திவிடுமா என்றால் அதுசாத்தியப்படப் போவதில்லை.

ஆனாலும், நம் எதிர்காலத்துக்காக அது நடைபெற்றே ஆகவேண்டும். நாட்டின் அரசராகப்பட்டவர் மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் ஏகபோகமாக, தமது சுகபோகத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்றால், அது முடியாது என்கிற
மனோநிலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னரேயே உலகத்தில் வளரத் தொடங்கியது.

அதற்கு முன்னரான காலங்களில் அது கணக்கிலெடுக்கப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டிருக்கிறது. ஆட்சி மாற்றங்களை மக்களே ஏற்படுத்துகிறார்கள்.

இலங்கையில் தமிழர் தரப்பின் ஆயுத யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்த வேளை ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு முழுமூச்சாகக் காரியத்தில் இறங்கி போரை முடித்து நாட்டு மக்களுக்கு அமைதியைக் கொடுத்திருந்தனர்.

இந்த அமைதியை ஏற்படுத்திய, நாட்டைப் போரிலிருந்து மீட்ட ஒரு தரப்பாக மகிந்த
தரப்பு மாறியது. அதே நேரத்தில் தம்மை ஒரு அரசராகவே மகிந்த எண்ணிக் கொண்டார். அந்த எண்ணத்தில் மண்ணைப் போடும் வகையிலேயே
ஆட்சி மாற்றம் ஒன்று மைத்திரிபால சிறிசேன மூலம் ஏற்படுத்தப்பட்டது.

இது ‘போரில் வென்ற’ ஒருவரை நடத்துவதற்கான வழி இதுவல்ல என்ற கருத்தை அப்போதே உருவாக்கியிருந்தது. இருந்தாலும் அதனை மீண்டும் உருவாக்கிக்கொள்ள மகிந்த தரப்பு பொதுஜன பெரமுனவை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார்.

ஆனால், அவர்களது அதி அதிகாரம் மிக்க மனோநிலை காரணமாக அது நாட்டில் ‘அரகலய’ போராட்டத்தை உருவாக்கி கை நழுவிப் போனது. இப்போது வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறிய ஆடம்பரங்களுடனேனும் அரச மாளிகையில் வாழ முடியாது சாதாரணமான வாழ்க்கைக்குச் சொந்த ஊருக்கே மகிந்த ராஜபக்‌ஷவை அனுப்பி வைத்திருக்கிறது.

உண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டதற்கான காரணமாக மகிந்த ராஜபக்‌ஷவே இருந்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு நடைபெற்றுவந்த, அவருடைய செயற்பாடுகளே காரணம் என்று சொல்லலாம். போரில் வென்ற ஒருவரை இவ்வாறு நடத்துவதா என்ற அந்த வாதங்கள் முற்றிலும் உண்மையற்றவை அல்ல. இருப்பினும், அதனை அபரிமிதமாக அனுபவிக்க முயன்றது பிரச்சினையானது என்பதே உண்மையாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்னர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் விளைவாக நாட்டிலிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் மனைவி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன போன்றோருக்கும் இருந்த சலுகைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கைச் சட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்குச் சலுகைகள் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டிருந்தன. இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்த சலுகைகளை அவர் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் இயற்றியிருந்தார்.

அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால், அவர் வெளியேறிய பிறகு, நாங்கள் அவரைப் பார்த்ததில்லை அல்லது கேள்விப்பட்டதில்லை. அதே நேரத்தில், மரணத்தின் பின்னரே அறியமுடிந்திருந்தது.
இருப்பினும், காலம் செல்லச் செல்ல, ஆட்சிக்கு வந்தவர்களால் நடைமுறை மாறியது. சலுகைகளைப் பயன்படுத்துவதில் யாரும் வெட்கப்படவில்லை.

பின்னர், முன்னாள் மைத்ரிபால சிறிசேனவும் ஓய்வு பெறுவதற்கு முன்பு தனக்கு ஓய்வு பெற ஒரு வீட்டை ஒதுக்கிக் கொண்டார். மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்ட
அதிகாரப்பூர்வ வீடு 30,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருந்தாலும், அதன் புதுப்பித்தல்கள் மிகையான செலவில் மேற்கொள்ளப்பட்டு பெரிதாக்கப்பட்டன. அது நியாயமானதாகச் செய்யப்படவில்லை என்பதே பிரச்சினை. முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தன்னுடைய வீட்டினையே பயன்படுத்தினார். அதேபோன்றுகோட்டபாய ராஜபக்‌ஷ அவருடைய மிரிஹானவில் உள்ள அவரது வீட்டிலேயே வசித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த சலுகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக மாறி நாடாளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இனிமேல் இந்தச் சலுகைகள் இருக்கப் போவதில்லை. உண்மையில் அவ்வாறு செய்திருக்கத் தேவையில்லை என்பது கருத்தாக இருந்தாலும், சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுக்கும் இதுவே நிலை.

சலுகைகளைப் துஷ்பிரயோகம் செய்து, அந்த அதிகப்படியான செயல்களுக்காக தற்போது வெளியேற்றத்தில் முடிந்திருக்கிறது. சமூக ஊடகங்களின் விமர்சனங்களுக்கு அப்பால் நிறைவேறியிருக்கும் நாட்டுக்கான செயலை பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால், தமிழர் விவகாரத்தில் மாத்திரம் எந்த மாற்றமும் இல்லாமலேயே நகர்வுகள் இருக்கின்றன. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாங்கம் தாங்கள் இப்போதுதான் ஆட்சியை ஆரம்பித்திருக்கிறோம் என்று தாமதிப்பதற்கான காலத்தைக் கேட்டிருந்தனர். ஆனால், இந்த வருடத்தில் முன்னர் இருந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அதே செயற்பாடுகளையே செய்யத் தொடங்கியிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51?1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணை மற்றும் அத் தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட சகல விடயங்களும் கால நீடிப்பு செய்யப்படவேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பேரவையின் முடிவில் இப் பிரேரணை என்ன தீர்மானத்தினைக் கொண்டுவரப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப் பிரேரணையைத் தங்களது நிலைப்பாட்டுக்கு ஏற்றவகையிலேயே நகர்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கிறது.

இலங்கையில் யுத்தம் நிறைவுபெற்ற வேளை ஜனாதிபதியாக இருந்த மகிந்த நாட்டில் இருந்த தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வை முன்வைத்து முடித்து வைத்திருக்கலாம். இருந்தாலும், அதனை அவர் செய்திருக்கவில்லை. இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பெரும்பான்மை பாராளுமன்ற பலத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு விரைவான தீர்வை முன்வைக்கலாம்.

இருந்தாலும் அதனை அந்த அரசாங்கம் செய்யப் போவதில்லை. ஊழல்வாதிகளைச் சிறையிலடைப்பதையும், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாமல் செய்வதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை இல்லாமல் செய்வதும் என நகர்வதனைவிடவும் முக்கியமான பிரச்சினையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணக்கிலெடுக்காதிருப்பதற்குக் காரணம் முன்னைய ஆட்சியாளர்கள்
போன்று தமிழ் மக்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்கிற மனோநிலையா? என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நடைபெற்று வருகின்ற விடயங்கள் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்படாமலே ஆட்சி முடிந்துவிடும் நிலையைத்தான்
ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.