எதிர்க்கட்சிகளின் அதிகாரப் பசி!
கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் நெல் அறுவடை மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியல் தலையீடுகள் மற்றும் தூண்டுதல்கள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
நாட்டின் சில இடைக்கால போகத்திற்கான நெல் அறுவடை மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகளைத் தூண்டி விடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு கிலோகிராம் நாடு நெல்லுக்கு ரூ. 120, சம்பாவுக்கு ரூ. 130 மற்றும் கீரி சம்பாவுக்கு ரூ. 140 என குறைந்தபட்ச உத்தரவாத விலையை நிர்ணயித்துள்ளது.
இருப்பினும், அதிகரித்துள்ள உற்பத்திச் செலவை ஈடுகட்ட இது போதாது எனத் தெரிவித்து கிழக்கு மற்றும் வடமாகாண விவசாயிகள் சிலர் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலைமையை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விவசாயிகளின் அதிருப்தியை அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களாக மாற்ற முயற்சிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசாங்கம் முன்னெடுக்கும் விவசாயிகளுக்கான செயற்திட்டங்களையும் பாதிக்கும் விடயமாக உள்ளது.
விவசாயிகளின் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி உரத் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணிகளை முன்வைத்து, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறு பக்கத்தில், விவசாயிகளின் நெல் கொள்முதல் சிக்கல்கள் மற்றும் இடைக்கால பருவத்திற்கான விவசாயத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் இடையேயான அவசர ஆலோசனைகள் இடம்பெற்றும் வருகின்றன.
இந்த நிலையில், விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் உர மானியத்தை ஹெக்டேயருக்கு ரூ. 30,000 வாகவும் ஏக்கருக்கு ரூ.12000 வரையும் உயர்த்தியுள்ளதுடன், நேரடி மானியமாக ஒரு தவணையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவும் வைத்துள்ளது. எனினும், சந்தையில் உரத்துக்கான தட்டுப்பாடு மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், விவசாயிகள் தனியார் விற்பனையாளர்களிடம் அதிக விலைக்கு உரத்தை வாங்க முற்படுகின்றார்கள்.
அரசாங்கம் விவசாய சேவை நிலையங்கள் மூலம் மானிய விலையில் உரத்தை வழங்கி வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் தட்டுப்பாடு மற்றும் காலதாமதம் காரணமாக, விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைகளுக்காகத் தனியார் சந்தையில் அதிக விலை கொடுத்து உரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விவசாயிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடும் சூழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
NPP (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கம் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்பை பலப்படுத்த அதிகளவான நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
நீர்ப்பாசனத் துறையின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பல பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிறுபோக மற்றும் பெரும்போகச் செய்கைக்கான நீர் விநியோகம், உரம் மானியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண சபைக்கு ரூ. 1800 மில்லியனுக்கும் அதிகமான விசேட நிதி, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் விவசாயக் குளங்கள், கால்வாய்கள் மற்றும் அடிப்படை வசதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண விவசாயிகளின் இழப்பீடுகளுக்காகவும், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஊடாக துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் வழிகாட்டலில், ஒருங்கிணைந்த நீர்வழங்கல் மற்றும் நீர்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள சாலியபுர அணைக்கட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் போன்ற பல குளங்கள் மற்றும் அணைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில், விநாயகபுரத்தில் அமைந்துள்ள கால்நடை விவசாயப் பயிற்சி நிலையத்தில் தங்கிப் படிக்கும் வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தை அமைக்க 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டில் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி மற்றும் வணிகப் பயிர்ச்செய்கைகளை உள்ளடக்கிய வாழ்வாதாரத் திட்டம் அண்மையில் திறக்கப்பட்டது.
இருப்பினும், அரசாங்கத்தின் இத்திட்டங்களின் உண்மையான பலன்களை மறைத்து வரும் எதிர்க்கட்சிகள், விலை வீழ்ச்சி மற்றும் உரம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி வருகின்றன. அத்தோடு நின்றுவிடாமல், உர விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாகக் பொய்யானப் பிரசாரங்களை மேற்கொள்வதுடன், அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலையையும் உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி, ஒன்றிணைத்து, தங்களின் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக வீதிப் போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்கும், தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவதற்கும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சில பெரிய அளவிலான தனியார் நெல் ஆலை அதிபர்கள் திட்டமிட்டு நெல் கொள்வனவைப் புறக்கணிப்பதாக குற்றச் சாட்டு பரவலாகவே இருக்கின்றது.
நெல் கொள்வனவுப் பிரச்சினைக்கு பின்னால் உள்ளூர் வர்த்தக மாஃபியாக்களின் சந்தைக் கையாளுகைகளும், அதனைச் சுற்றியுள்ள பரஸ்பர அரசியல் பழி சுமத்தல்களும் ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாக புலப்படும் விடயமாகவும் உள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்ட தரப்பினர், நெல் இருப்புக்கள் உண்மையான விவசாயிகளிடம் இல்லை என்றும், இடைத்தரகர்கள் மற்றும் பெரிய நெல் ஆலை மாஃபியாக்களே விலையைச் குறைத்து அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த விவசாயிகளைத் தூண்டிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நெல் கொள்வனவுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உலகச் சந்தையில் உர விலை அதிகரித்துள்ள போதிலும் விவசாயிகளுக்குத் தேவையான மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் அம்பாறை மாவட்ட செயலகங்கள் முன்பாக விவசாயிகள் அண்மைய நாட்களாக கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்தி தங்களின் கோரிக்கைகளை மகஜர்கள் ஊடாக கையளித்து வருகின்றனர். ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமான அரசியலாக்க முற்படுகின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) போன்ற கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் விவசாய அமைப்புகளுடன் இணைந்து ஆங்காங்கே போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் எவ்வகையான அரசியல் சூழ்ச்சிகளில் இறங்கினாலும், அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டே நெல்லின் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் என்ற வகையில், விவசாயிகளுக்கு அதிகபட்ச நியாயமான விலையை வழங்கவும், எதிர்வரும் நாட்களில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளில் அரசு நெற் களஞ்சிய சாலைகளை திறக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அரச சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்க அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தும் வருகின்றார்கள்.
அஹமட் இர்ஷாட்…