அக்கரையும் இக்கரையுமாக பிரிந்து கிடக்கும் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு அக்கரையும் இக்கரையுமாக கிடக்கின்றது. அதனைப் பாலங்கள் அமைத்து இணைப்பதற்கு கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. இதனால் கிழக்குக்கரை மேற்குக்கரை என்கின்ற எழுவான்கரை படுவான்கரை பெரு நிலங்களை இணைக்க முடியவில்லை. பாலங்கள் இல்லாததால் விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கைத்தொழில், சுற்றுலா போன்ற துறைகளில் சாதகமான அபிவிருத்திகளைச் செய்யமுடியவில்லை. குறிப்பாகப் படுவான் கரையில் வாழும் மக்கள், மாணவர்கள் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அப் பகுதி அபிவிருத்தியில் தொடர்ந்தும் பின்னடைவாகக் காணப்படுகின்றது. உச்சமான கல்வியைப் பெறமுடியாமல், பெரும்பாலும் படுவான்கரையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் கலைத்துறையோடு தமது கல்வியை மட்டுப் படுத்திக் கொள்கின்றனர். வசதியான சில மாணவர்கள் மாத்திரம் விஞ்ஞான, கணிதத் துறைகளைக் கற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். பல்வேறு துறைகளில் பாதிப்புக்கு உள்ளாகும் படுவான்கரையில் அபிவிருத்தியை மேம்படுத்த வேண்டுமாயின் நரிப்புல் தோட்டம் (135மீற்றர், 88 கோடி ரூபாய்), மண்டூர் (900 மீற்றர், 585 கோடி ரூபாய்), அம்பிளாந்துறை (1000மீற்றர்,650 கோடி ரூபாய்) , தீலிவட்டை(250மீற்றர்163 கோடி ரூபாய்), முருக்கன் தீவு ( 175மீற்றர்,115 கோடி ரூபாய்) ஆகிய பாலங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும். இங்கு.பாலங்கள் இல்லாததால் தோணிகள், படகுகள் மூலமான பயணங்களின்போது பல பெறுமதியான மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.
இதில் மாணவர்கள் குழந்தைகளின் உயிர்களும் அடங்கும். மாரி காலங்களில் வாவியினூடான பயணங்கள் துண்டிக்கப்படுகின்றன.
யுத்த காலத்தில் பாலங்கள் இல்லாததால், படுவான்கரை மக்கள் சகல விடயங்களிலும் அதிகமான இழப்புகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். மேலும், கிரான் (250மீற்றர்,162 கோடி ரூபாய்), பட்டிருப்பு ( 210 மீற்றர்,136 கோடி ரூபாய்) ஆகிய பாலங்கள் மீள்கட்டுமானம் செய்யப்பட வேண்டும். இவற்றில் பட்டிருப்புப் பாலம் மட்டுமே மத்திய அரசின் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய பாலமாக உள்ளது. ஏனைய ஆறு பாலங்களும் மாகாண சபையின் ஆளுகையிலுள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கான பாலங்களாக உள்ளன. மாகாண சபைக்கான அதிகாரம், நிதி என்பன மிகவும் நலிவாக உள்ளதால். மாகாண சபையின் கீழுள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களங்களால் குறிப்பிட்ட பாலங்கள் எதனையும் புனரமைக்க முடியாதுள்ளது. இப்பாலங்களின் அபிவிருத்தி மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து மத்திய அரசின் அமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதிகாரம், உள்ளூர் அபிவிருத்திகளை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மறுக்க முடியாதது. மாகாண சபை தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளின் ஊடாக மாகாண சபைகளின் செயல்பாடுகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் போது, இத்தகைய உட்கட்டமைப்புச் சவால்களுக்கு நிலையான தீர்வுகளைக் காண முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வலிமையையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு மாகாண சபை கட்டமைப்பை முழுமையாகச் செயற்படுத்துவதும், போதிய நிதி மற்றும் அதிகாரங்களை வழங்குவதும் அவசியமாகவுள்ளது.
கடந்த காலங்களில் நிலவிய போர்ச் சூழல்கள் காரணமாக, நாட்டின் மொத்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சில பகுதிகளிலேயே அமைந்திருந்தன. இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றது. பாலங்கள், வீதிகள் உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்புகளின் குறைபாடும் தொழில் வளர்ச்சிக்குச் சவாலாக விளங்குகின்றது. மாகாண சபைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் குறிப்பிட்ட அளவிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது, மத்திய அரசின் தலையீடின்றி அப் பிராந்தியங்களிலேயே உடனடி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். பிராந்திய ரீதியான பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான கோரிக்கைகள் சரியான முறையில் அணுகப்படாதவிடத்து, அது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தோற்றுவிக்கக்கூடும். எனவே, நிலையான சமாதானத்திற்கும் பிராந்திய சுபிட்சத்திற்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் அவசியமானவை.