வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அருகில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யும் முடிவு எட்டப்பட்டது.
குறித்த ஆடை சர்ச்சை தொடர்பாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 2026 ஓகஸ்ட் 18ம் திகதி அன்று பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் தற்காலிக தீர்வாக குறித்த ஒன்பது பெண் ஊழியர்களையும் அருகில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.
சிறிய விடயங்கள் கூட இன முரண்பாடுகளாக வெடிக்கக் கூடாது என்பதில் அவதானம் செலுத்தப்பட்டு, சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புடைய பிரதி அமைச்சர்கள் இந்த நிலைமையைச் சுமூகமாகத் தீர்க்கவும், அமைதியைப் பேணவுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் மற்றும் வைத்தியசாலையின் சுமுகமான செயல்பாட்டைக் கருத்திற் கொண்டே புதிதாக நியமனம் பெற்ற பெண் ஊழியர்களுக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடைப் பிரச்சினைக்குத் தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் இருக்க குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நிரந்தரத் தீர்வை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு, வைத்தியசாலை கட்டமைப்பில் முறையான சீருடை விதிகள் நடைமுறையில் உள்ளன. ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், ஊழியர்கள் மற்றும் தரப்பினர் அதனைச் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடாக அளிக்கலாமே தவிர, அதனை இன அல்லது மதப் பிரச்சினையாக மாற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் இந்த தற்காலிக முடிவை மையமாக வைத்து எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 159 பெரும்பான்மை ஆசனங்களுடன் பலத்துடன் இருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், முஸ்லிம் ஊழியர்களின் ஆடை உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டபூர்வமான அல்லது நிரந்தரமான தீர்வை வழங்காமல், தற்காலிக இடமாற்றத்தை வழங்கியது பலவீனமான செயல் என விமர்சிக்கின்றனர்.
அரசாங்கம் தமிழ் டயஸ்போராவுக்குப் பயப்படுகின்றதா? அல்லது தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான ஒரு தற்காலிகமான இடமாற்றத்திற்கான சமரச முடிவை எடுத்துள்ளதா என்று எதிர்த்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கும் எதிராகப் பாரிய ஊழல் அல்லது பொருளாதார வீழ்ச்சி போன்ற வலுவான அரசியல் காரணிகளை முன்வைக்க முடியாத சூழலில், எதிர்த்தரப்பினர் இத்தகைய உணர்வுப்பூர்வமான விடயங்களைக் கையில் எடுத்துள்ளனர். இதன்மூலம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே மீண்டும் ஒரு தேவையற்ற முரண்பாட்டைத் தோற்றுவித்து, அதில் அரசியல் இலாபம் தேடவே அவர்கள் முயற்சிக்கின்றனர் என நடுநிலை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தோடு, தேர்தல் காலங்களில் அல்லது அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவை இழக்கும் போது, தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி வாக்கு வங்கியைக் தக்கவைத்துக் கொள்ளும் பழைய அரசியல் பாணியே இது எனவும் சுட்டிக்காட்டப்படுவதோடு, வைத்தியசாலைகளில் இவ்விடயத்தை பூதாகரப்படுத்தி நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மை உருவாக்குவதே இதற்கு பின்னால் இருந்து செயற்படுபவர்களின் குறுகிய அரசியல் நோக்கமாக உள்ளது.
சிறுபான்மை மக்களிடையே காணப்படும் மத, கலாசார மற்றும் உரிமை சார்ந்த உணர்வுகளை மையப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்துவதும், அதன் மூலம் தங்களின் வீழ்ச்சியடைந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதும் பாரம்பரிய அரசியல்வாதிகளின் வழக்கமான அரசியல் உத்தியாகவே இருந்து வருகின்றது.
”அரசாங்கம் பயந்துவிட்டது” அல்லது “சமரசம் செய்துவிட்டது” என்ற விவாதங்களை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம், ஒரு நிர்வாக ரீதியான தற்காலிக தீர்வை, உரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவமாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.
கல்முனைப் பகுதி ஏற்கனவே எல்லை நிர்ணயம், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் காணி விவகாரங்கள் என தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நுட்பமான அரசியல் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இவ்வாறான சூழலில், வைத்தியசாலை சீருடை விவகாரத்தை ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும் மறு தரப்பிற்கு எதிராகவும் சித்தரிப்பது, சாதாரண மக்களுக்கிடையே தேவையற்ற சந்தேகத்தையும் இடை வெளியையும் உருவாக்கும் அபாயம் கொண்டது.
திரைமறைவில் கூட்டாகத் தீட்டப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும், மக்களால் இழக்கப்பட்ட தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடையில், தமிழ் – முஸ்லிம் மக்கள் அகப்படக்கூடாது. பல தசாப்தங்களாக ஒன்றுபட்டு வாழும் இவ்விரு சமூகங்களின் உறவில், ஒருசில அரசியல்வாதிகளின் குறுகிய கால சுயநல இலாபங்களுக்காக விரிசல் ஏற்படுவதை நடுநிலைவாதிகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
மக்களின் உணர்ச்சிவசப்பட்ட நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊழல்வாதிகளும் தீவிர இனவாதிகளும் மீண்டும் தங்களைச் “சமூகப் பாதுகாவலர்களாக”க் காட்டிக்கொள்ள முற்படுகின்றனர். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தீவிரப் போக்குடைய சில முகநூல் பயனாளர்களைத் திரைமறைவிலிருந்து இயக்கி, சமூக ஊடகங்கள் வாயிலாக எல்லைமீறிய வெறுப்புப் பரப்புரைகளைத் திட்டமிட்டுப் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இரு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மிகவும் அவதானத்துடன் தொழிற்பட வேண்டியது அவசியமாகும். சமூகப் பிளவை ஏற்படுத்தும் முகநூல் பயங்கரவாதிகளின் உணர்ச்சிகரமான முகநூல் பதிவுகளுக்குப் பலியாகாமல், பிரச்சினைகளை நிதானமாகவும் சட்டபூர்வமாகவும் அணுகுவதே இரு சமூகங்களினதும் நீண்டகால ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும்.
கடந்த ஜூலை 2026 இல் தமிழ் – முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த பொதுக் கூட்டணி, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்ட போதிலும், இவ்வாறான சொந்தப் பிராந்தியப் பெண் ஊழியர்களின் அடிப்படைத் தொழில்சார் மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை என்ற அதிருப்தியும் நியாயமான விமர்சனங்களும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்துள்ளன.
இக் கூட்டணியானது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்து, தங்களின் தேர்தல் இலக்குகளையும் அரசியல் அதிகாரத்தையும் அடைவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். மாறாக, அடிமட்ட மக்களின் கலாசார, மத உரிமைகளை உடனடியாகப் பாதுகாப்பதிலோ அல்லது சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்துவதிலோ இவர்களுக்கு எவ்வித உண்மையான அக்கறையும் இல்லை என்பதே நிதர்சனமாகும்.
இவர்கள் வெளியிடும் ஊடக அறிக்கைகளுக்கும் அப்பால், இக்கூட்டணியின் உண்மையான நோக்கம் ஒரு திட்டமிடப்பட்ட “அரசியல் நாடகம்” மட்டுமே என்பது, கூட்டணி அமைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னரே சிறுபான்மை மக்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டுவிட்டது.
ஒரு அரச நிறுவனத்திற்குள் ஏற்படும் நடைமுறை சார்ந்த அல்லது கலாசார சீருடை சார்ந்த பிரச்சினைகளை சட்டம், மனித உரிமை மற்றும் துறைசார் ஒழுங்கு முறைகளுக்கு அமைவாகவே அணுக வேண்டும். அதனை இனவாத அல்லது மதவாத ஆயுதமாக மாற்றி, அரசாங்கத்திற்கும், சமூகங்களுக்கும் இடையே தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்க முனையும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை இனங்கண்டு மக்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு படித்த இளைஞர் சமூகத்திற்கும், நடுநிலை சிந்தனையாளர்களுக்கும் இருக்கின்றது.
எனவே, குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்படும் வதந்திகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான பிரசாரங்களை நிராகரித்து, நிதானத்தை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். சமூக வலைத்தளங்களை கையாளும் மக்கள் உடனடி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல், எதிர்கால சந்ததியினரின் அமைதியான வாழ்வையும், அம்பாறை மாவட்டத்தின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பையும் மனதில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதைத் தவிர்த்து, மத மற்றும் கலாசார உரிமைகளை பரஸ்பரம் மதித்து நடப்பதுடன், சமூக நல்லிணக்கத்தை முதன்மையாகக் கொண்டு இரு சமூகங்களும் செயற்படும் போது மட்டுமே, இவ்வாறான உணர்வு பூர்வமான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் ஆரோக்கியமான தீர்வை எட்ட முடியும்.