;
Athirady Tamil News

கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டிய கழிவுகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு வலி.வடக்கு பிரதேச சபை காலக்கெடு

0
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து , வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் , அது தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , 13ஆம் திகதிக்கு முன்னர் , வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில் தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.