;
Athirady Tamil News

மெட்ரோ பஸ்களும் நகர்ப்புற பொருளாதார மறுமலர்ச்சியும்

0
இலங்கையில் லங்கா மெட்ரோ டிரான்சிட் (LMT) இன் அறிமுகம், நாட்டின் நகர்ப்புறப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை எவரும் மறுக்கமுடியாது. இலங்கை போக்குவரத்துச் சபையின் கீழ் 2025இல் அமைச்சு ஒப்புதல் பெற்று, ஏப்ரல் 2026இல் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வின் மூலம் குறைந்த தளத்தைக் கொண்ட 10 குளிரூட்டப்பட்ட பேருந்துகளுடன் இது தனது முதற்கட்டப் பயணத்தைத் தொடங்கியது.

மாகும்புர- கோட்டை மற்றும் மாகும்புரே – கடுவலை ஆகிய இரு வழிகளில் தொடங்கிய சேவை, மிகக் குறுகிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளின் வருகையுடனும், புதிய பணிமனைகளின் உருவாக்கத்துடனும் 7 பிரதான பாதைகளுக்கு விரிவடையும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. பல வருடங்களாக வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்த பொது மக்கள் விரைவுப் போக்குவரத்துத் திட்டங்கள், தற்போது யதார்த்தமாகி வருவதை வரவேற்கவே வேண்டும்.

ஆனால், இதுவொரு வெற்றிகரமான திட்டம் என்பதை விட, இது நாட்டின் பொருளாதார மற்றும் நகர்ப்புற நகர்வுச் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும் .

இலங்கை சிறிய நாடாக இருப்பினும், நாட்டின் அனைத்து மூலைகளையும் இணைக்கும் பேருந்து வலையமைப்பும், பழமைவாய்ந்த ரயில்வே கட்டமைப்பும் இங்கு ஏற்கனவே உள்ளன.

பிரச்சினை என்னவெனில், கட்டமைப்புகள் இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனி உலகங்களாக இயங்குவதுதான்.

பேருந்துகள், ரயில்கள், மற்றும் முச்சக்கர வண்டிகள் ஒருங்கிணைக்கப்படாமல் இயங்குகின்றன. இதன் விளைவாக, கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, நாட்டின் உற்பத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

சேவைகளின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதால், வசதியுள்ள பெரும்பாலான மக்கள் சொந்த வாகனப் பயன்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

எனவே, LMT பேருந்துகள் மட்டுமே இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் தீர்த்துவிட முடியாது. அதைச் சுற்றி நாம் அமைக்கும் அமைப்பிலேயே இதன் முழு வெற்றியும் தங்கியுள்ளது.

பல நாடுகளில் நகரங்களின் போக்குவரத்து அமைப்புகளை அவதானிக்கும்போது, அங்குள்ள உட்கட்டமைப்பை விட பல்வேறு போக்குவரத்து முறைகள் எவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்பதே மிகவும் முக்கியமானது.

அவை தூய்மையாகவும் துல்லியமான நேர நிர்வாகத்துடனும் இயங்குகின்றன. பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுவதால் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறைகிறது.

பல செயலிகள் பொதுப் போக்குவரத்திற்குப் போட்டியாக இல்லாமல், ஆரம்பம் மற்றும் இறுதிப் பயணங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றன.

வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் நடந்தே செல்லும் வகையில் பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

LMTஐ ஒரு தனித்த பேருந்துத் திட்டமாக மட்டும் பார்க்காமல் ரயில் பாதைகள், வழக்கமான இ.போ.ச பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் எதிர்கால திட்டங்களை இணைக்கும் ஒரு மையப் புள்ளியாக அது இருக்க வேண்டும்.

வீட்டின் வாசலில் தொடங்கி இலக்கை அடையும் வரையிலான முழுப் பயண அனுபவமுமே ஒரு பயணிக்கு முக்கியமானது. இணைப்புச் சேவைகளும் முனையங்களும் சீராக இருந்தால் சொந்த வாகனங்களை நாடாமல் மக்கள் புதிய பேருந்துகளையே நாடுவார்கள்.

பொதுப் போக்குவரத்து என்பது “வேறு வழியில்லாதவர்களுக்கானது” என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதே இங்கு முக்கியமானது.

சொந்தமாக கார் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ள நபரும், விருப்பப்பட்டுப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு தூய்மை, நம்பகத்தன்மை, டிஜிட்டல் பயணச்சீட்டு முறை மற்றும் நேரலைத் தகவல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்து என்பது பொருளாதாரத்தின் உயிர்நாடி. போக்குவரத்து என்பது வெறும் மனிதர்களை நகர்த்துவது மட்டுமல்ல, அது வேலைவாய்ப்புகளையும் சந்தைகளையும் மக்களுடன் இணைக்கிறது.

2025 இறுதியில் வீசிய ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் போது, போக்குவரத்துத் துறைக்கு மட்டும் சுமார் 1.735 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது. ரயில் பாதைகள் முடங்கியதால் நாட்டின் சுற்றுலாத் துறையும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டடன.

இதிலிருந்து விளங்குவது என்னவென்றால், போக்குவரத்துத் துறை பாதிக்கப்பட்டால் அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும் ஏற்றுமதியையும் நேரடியாகப் பாதிக்கும்.

சிறந்த போக்குவரத்து அமைப்புகள், நிலையங்களை வெறும் பயணிகள் ஏறி இறங்கும் இடமாகப் பார்ப்பதில்லை.

மாகும்புர மற்றும் கடுவலை போன்ற முனையங்களைச் சுற்றி வீடமைப்பு, வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்களை உருவாக்குவதன் மூலம், அவை பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பான நகர மையங்களாக உருவெடுக்க முடியும்.

இலங்கை போன்ற வளரும் நாடுகள், அமைக்கப்பட்ட வீதிகளின் கிலோமீற்றர் அளவையோ அல்லது வாங்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையையோ வைத்து மட்டுமே வளர்ச்சியை மதிப்பிடுகின்றன.

LMTயின் உண்மையான வெற்றி என்பது, “அது மக்களின் அன்றாட வாழ்க்கையையும் வணிகத்தையும் எவ்வாறு எளிதாக்குகிறது?” என்பதில்தான் உள்ளது.

ஒரு பயணி இ.போ.ச பேருந்து, LMT, ரயில் மற்றும் முச்சக்கர வண்டி எனப் பல சேவைகளை ஒரே பயணச்சீட்டு மூலம் தடையின்றிப் பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒருங்கிணைப்பு முயற்சிகள் அவசியம்.

சொந்தமாக வாகனம் வாங்குவதே பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்ற மனநிலையை மாற்றி, திறமையான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமான தேர்வு என்ற நிலையை LMT உருவாக்க வேண்டும்.

புதிய பேருந்துகளின் வருகை நல்வரவு. ஆனால், LMT என்பது வெறும் ஒரு பேருந்து சேவையா அல்லது நாட்டின் எதிர்கால நகர்வுக்கான அடித்தளமா என்பதை, அதைச் சுற்றி உருவாக்கப்படும் இணைப்பு அமைப்புகளே தீர்மானிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.