;
Athirady Tamil News

சிறுமிக்கு ரோபோ மூலம் பாலியல் தொல்லை… ஜெர்மனியில் பரபரப்பு சம்பவம்..

0

பெர்லின்,

ஜெர்மனியில் 16 வயது சிறுமி ஒருவருக்கு ரோபோ மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த ரோபோவை ஜெர்மன் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த ரோபோ

ஜெர்மனியின் கொலோன் நகர மையத்தில் ஒரு துரித உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்கு வெளியே, கடந்த வார இறுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது சிறுமி தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 120 சென்டிமீட்டர் (3.9 அடி) உயரமுள்ள ஒரு ரோபோ, அந்த சிறுமியை பின்புறமாக அணுகி அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரோபோ

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் மற்றும் அதன் அருகே இருந்த 2 பேரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரின் பின் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்த ரோபோவை போலீசார் கண்டறிந்து, அதனை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

தொலைவிலிருந்து இயக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் மற்றும் 38 வயது நபர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ரோபோ தானாகவே இயங்கியதா அல்லது இந்த இருவரும் சேர்ந்து செல்போன் செயலி மூலம் தொலைவிலிருந்து வேண்டுமென்றே ரோபோவை இயக்கி சிறுமிக்கு தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அவர்களின் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில், ரோபோவைக் கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்த புகார் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.