;
Athirady Tamil News

போதைப்பொருள் ஆபத்தும் சிங்கப்பூர் முன்மாதிரியும்

0

முன்பெல்லாம் நமது நாட்டின் பாராளுமன்றத்தில் “சிங்கப்பூர்” என்ற வார்த்தை எப்போதாவதுதான் அடிபடும். அதுவும் எப்படிப்பட்ட சூழல்களில் என்பது யாருக்கேனும் நினைவில் உள்ளதா?

நமது நாட்டின் சாதாரண குடிமகன் அரச மருத்துவமனையில் மாத்திரை வாங்கக்கூட சிரமப்படும்போது, மக்கள் சேவைக்காகச் சென்றதாகக் கூறிக்கொண்டு ‘புகழ்பெற்ற வைத்தியசாலைக்கு’ச் சென்று சிகிச்சை பெற ஜனாதிபதி நிதியத்திலிருந்து நூறு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்ற கதைகள் பேசப்படும். அல்லது மத்திய வங்கியைச் சுத்தம் செய்துவிட்டு சிங்கப்பூருக்குக் களைப்பாறச் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை என்ற கதைகள் கேட்கும். இல்லையெனில், சிங்கப்பூரைப் போல நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என்று கூறி அடிக்கடி அங்கு சென்று சொக்லேட் வாங்கி வந்த உயர் அதிகாரிகளைப் பற்றிப் பேசப்படும்.

அப்படிப்பட்ட செய்திகள் பாராளுமன்றத்தில் பேசப்பட்டபோது ஏற்படாத சலசலப்பு, தற்போதைய நீதியமைச்சர் சிங்கப்பூரை மேற்கோள் காட்டி அண்மையில் ஆற்றிய உரையால் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் சிலர் நன்றாகவே குழம்பிப்போய்விட்டனர். இவ்வளவு தூரம் அவர்கள் குழப்பமடைவதற்கு அமைச்சர் அப்படி என்னதான் கூறினார்?

“நாங்கள் இந்தச் சட்டத்தை வானத்திலிருந்து கொண்டு வரவில்லை. சட்டத்தின் இந்தப் பகுதியை சிங்கப்பூரின் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்திலிருந்து’ (Organized Crime Act of Singapore) பெற்றுக்கொண்டுள்ளோம்.

ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில பாதாள உலக அமைப்புகள் இயங்குகின்றன. அவர்கள் கை சைகைகள் (hand signals), பச்சை குத்துதல் (tattoos) அல்லது குழுவில் தங்களது பதவி நிலையை வெளிப்படுத்தும் அடையாளங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் சர்வதேச அளவில் குற்றக் குழுவின் உறுப்பினரா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அளவுகோலே இந்த தடயங்களும் உடைகளுமே தவிர, இதில் எங்குமே சிகையலங்காரம் பற்றிக் கூறப்படவில்லை.

எதிர்க்கட்சியினர் எந்த உலகத்திலிருந்து அதனைக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கறிஞர்களாக இருக்கும் அவர்களுக்கு இதை வாசித்து புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கப்போவதில்லை. ஆனால் அவர்கள் திட்டமிட்டே உண்மையைச் சொல்லாமல் விடுகிறார்கள். எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெச்சரிக்கையாகவே இந்த சர்வதேச வரையறையைச் சட்டத்தில் சேர்த்துள்ளோம். இது ஒரு மறுக்கக்கூடிய அனுமானமே தவிர, இறுதி முடிவல்ல.”

ஆனால் வழக்கம்போல எதிர்க்கட்சியினர், “ஐயோ கடவுளே , இனிமேல் நாங்கள் விரும்பியபடி தலை முடியை வளர்க்கவோ பச்சை குத்திக்கொள்ளவோ முடியாதா?” என்று கூறித் தங்களின் பொய் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

தசாப்தங்களாகப் போதைப்பொருளையும் பாதாள உலகத்தையும் தங்களின் மட்டரகமான அரசியலுக்குப் பயன்படுத்திய கலாசாரம் நாட்டில் வேரூன்றியிருந்தது என்பது இப்போது நீதிமன்றங்களில் அம்பலமாகி வருகிறது. அத்தகைய கேவலமான அரசியலை வீழ்த்தி, சமூக-அரசியல் மட்டங்களில் இருந்தும் நாட்டிலிருந்தும் போதைப்பொருள் அபாயத்தை வேரோடு பிடுங்கி எறியத் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியான அடியெடுத்து வைத்துள்ளது.

அதற்காகப் புதிய சட்டங்களை இயற்றி, மிகக் கடினமான, ஆபத்தான, பாரியதொரு பொறுப்பான பணிக்கு முகங்கொடுத்துள்ளது. ஏனெனில், தனது இலக்கை வென்றெடுப்பதற்குச் சிறந்த வழியைச் சிறந்த இடத்திலிருந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

இன்றுவரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிக வெற்றிகரமான நாடாக சிங்கப்பூர் விளங்குவதற்கு, நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூ பல தசாப்தங்களுக்கு முன்பே இட்ட வலுவான அடித்தளமே காரணமாகும்.

அன்று அவர் சிங்கப்பூரைப் போதை அரக்கனிடமிருந்து காப்பாற்றத் திட்டமிட்டபோது, உலக வல்லரசுகளும் மனித உரிமை அமைப்புகளும் மரண தண்டனைக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. எனினும், லீ குவான் யூ தனது முடிவில் சற்றும் தளராமல் நின்று, உலகமே ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களை எடுத்துரைத்தார். லீ குவான் யூ அன்று முன்வைத்த வாதங்கள் இன்றும் பொருந்தக்கூடியவையாகவே உள்ளன. அவரது அடிப்படைச் சிந்தனைகள் இவைதான்:

சமூகத்தின் நல்வாழ்வு

தனிநபர் உரிமையை விட மேலானது என்பது, “மேற்குலகக் கருத்துப்படி ஒருவனுக்குத் தான் விரும்பியதைச் செய்ய உரிமை இருக்கலாம். ஆனால் நமது சமூகத்தைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த மக்களுடையதும் நமது பிள்ளைகளினதும் எதிர்காலப் பாதுகாப்பு என்பது, போதைக்கு அடிமையான ஒருவனின் அல்லது கடத்தல்காரனின் உரிமையை விட மிக முக்கியமானது.”

“போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை நாசம் செய்து பணம் சம்பாதிப்பவர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சாம்பலாக்கும் அவர்களுக்குச் சமூகத்தில் எந்த இடமும் கரிசனையும் தரக்கூடாது.”

“சிங்கப்பூருக்குப் போதைப்பொருளைக் கொண்டுவந்தால் மரண தண்டனை உறுதி என்பதைச் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. இதனால்தான் கடத்தல்காரர்கள் எமது நாட்டுக்குள் வர அஞ்சுகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுகிறோம்.”

“சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக மையம் என் பதற்காக எமது சட்டங்களைத் தளர்த்தினால் சர்வதேசப் போதைப்பொருள் மையமாகச் சிங்கப்பூர் மாறிவிடும். குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விடயத்தில் சலுகை காட்டுவது நாட்டின் ஒழுக்கத்தையும் நிலைபேற்றையும் அடகு வைப்பதாகும்.”

“சிங்கப்பூரில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே, குறிப்பிட்ட அளவுக்கு மேல் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று பணிப்பெண்களால் அறிவிக்கப்படும். அவ்வாறிருந்தும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை அழிக்கும் போதைப்பொருளைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் மரண தண்டனை கூடப் போதாது,” என்று லீ குவான் யூ வெளிப்படையாகக் கூறினார்.

1994இல் ஆசியத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய அவர், “வாழ்க்கையையும் குடும்பங்களையும் அழிக்கின்ற போதைப்பொருள் கடத்தல்காரன் எத்தகைய கருணைக்கும் தகுதியற்றவன்” என்றார். மேலும் The New York Times இதழுக்கு அளித்த செவ்வியில், “போதைப்பொருளைப் பொறுத்துக்கொள்ளும் சமூகங்களில் குடும்பங்களும் சமூகங்களும் அழிவதைப் பார்த்திருக்கிறோம். அந்த நிலை சிங்கப்பூரில் ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என உறுதியாகத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர் லீ குவான் யூவிடம் தண்டிப்பது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, லீ குவான் யூ அளித்த பதில் புகழ்பெற்றது:

“நான் உங்களைவிடக் குறைந்த புத்திசாலியாகக்கூட இருக்கலாம். ஆனால், நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் எமது நாட்டின் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்துத் தவிக்கிறேன். நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்க 20 நிமிடங்கள் கூடச் செலவிடவில்லை. என்னைவிட உங்களுக்கு அதிக அறிவு இருப்பதாக நினைக்கிறீர்களா? போதைப்பொருள் கொள்ளையை விட ஆபத்தானது. நீங்கள் குழந்தைகளுக்கு ஹெரோயின் விற்றால், அந்தப் பிள்ளைகளே பெற்றோரிடம் கொள்ளையடிப்பார்கள். அதற்கு இடம் தர முடியாது.”

மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தமது நாட்டிலிருந்து போதை அரக்கனைத் துரத்தியடிக்க லீ குவான் யூ எடுத்த நேர்மையான முயற்சிகளின் பலனைத்தான் சிங்கப்பூர் இன்று அனுபவிக்கிறது.

எனவே, நாட்டைச் சரியான பாதைக்கு இட்டுச்செல்லும்போதும் அதற்காகச் சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தும்போதும் எழும் எதிர்ப்புகளையும் முணுமுணுப்புகளையும் விட, ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது நாட்டு மக்களின் சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.