;
Athirady Tamil News

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளும் தடைகளை நீக்குவதற்கு வழிகாட்ட வேண்டும் – கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சிறீதரன் எம்பி கோரிக்கை!

0

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளும் தடைகளை நீக்குவதற்கு வழிகாட்ட வேண்டும் – கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சிறீதரன் எம்பி கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இன்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார், ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா–ஓக் ரிட்ஜஸ்–ரிச்மண்ட் ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கனடா இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும், மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளும் அவசியமானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்காக கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கான சர்வதேச தடயவியல் உதவிகள் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.