;
Athirady Tamil News

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா?

0

கம்பராமாயணத்தில் எங்கே அறம் இருக்கிறது? வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா?

இரண்டு தினங்களுக்கு கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் குறித்த முகநூல் பதிவில் நான் அவர் கருத்து குறித்து வைத்த விமர்சனத்தில், போராட்டத்தினை மறக்க வேண்டும் புலம் பெயர்ந்த மக்கள் விலகி நிற்க வேண்டும் என்பதற்கு எனது கருத்தினை தெரிவித்து இருந்தேன்.

ஆனால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் விலகி நிற்க வேண்டும் என்பது அவருக்கு இலக்கியத்தில் இருக்கும் அளவிற்கு அரசியலில் அனுபவம் இன்மை புலப்படுகிறது. லெனின் , Ho Chi Minh, Fidel castro போன்ற பெரும் புரட்சிகர தலைவர்கள் பல ஆண்டுகளாக அன்னிய வாசத்தில் இருந்தே புரட்சிக்கான , விழிப்புனர்களிற்கான ஆயத்தங்களை செய்தார்கள். இன்றிருக்கும் இஸ்ரேலின் பலம் புலம் பெயர்ந்து வாழும் யூதர்களின் பலமே ஆகும். இவ்வாறு பதிலை அளித்திருந்தேன் .

அதற்கு நண்பர் ஒருவர் இவ்வாறு கேள்வியை கேட்டார் கம்பராமாயணம் கூறும் அறம்
நாட்டிற்கு மக்களுக்கு பயன் பட வேண்டும்
இதற்கு தானே மேடை அமைத்து கம்பராமாயணம் பேச்சு

என்றார். நான் நான் அவருக்கு எழுதிய பதிலை இங்கு பதிவு செய்கிறேன்.

கம்பராமாயணத்தில் அறம் எங்கே இருக்கின்றது?

வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா?

இந்தக் கேள்வியைக் கேட்கும்போதே, நம் மனதில் பல காட்சிகள் வந்து நிற்கின்றன.
தனக்கு சுக்ரீவனின் உதவி தேவை என்பதற்காக, வாலியை மறைந்திருந்து அம்பெய்து கொன்ற இராமன்…

சொர்க்கத்திற்குச் செல்ல வரம் வேண்டி யாகம் செய்த சம்பூகனை, அவன் சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காக கழுத்தறுத்த இராமன்…

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதிகாசம் என்ற பெயரில் சொல்லப்படும் கதைகளில், அறம் எங்கே? நீதி எங்கே? மனித நேயம் எங்கே?
இந்தக் கேள்விக்கு பாரதி அன்றே ஒரு பதில் சொன்னான். அதுதான் இன்றும் நமக்கு வழிகாட்டி.

“கட்டுக் கதைகள் எனும் நல்ல கவி பல தந்தார்”
ஆம். இராமாயணத்தை நாம் வரலாறாகப் படிக்க வேண்டியதில்லை. அறநூலாக வணங்க வேண்டியதில்லை.

அதை ஒரு காவியமாக ரசிக்கலாம்.
கம்பன் தந்தது கடவுளின் கதை அல்ல. தமிழின் கதை. சொல்லின் அழகு. கற்பனையின் உச்சம். மனித உணர்வுகளின் ஓவியம்.

கம்பராமாயணத்தில் இராமன் கடவுளாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் கம்பன் கடவுள். அவன் சொல் கடவுள்.

வாலி வதம் அறமா? சம்பூகன் வதம் நீதியா? என்று கேட்டால், கதை நம்மை தடுமாற வைக்கும். ஆனால் கம்பனின் கவிதையைக் கேட்டால், நம் உள்ளம் உருகும்.
அதனால்தான் பாரதி சொன்னான் — இவை கட்டுக் கதைகள் தான். ஆனால் அந்தக் கட்டுக் கதைகளுக்குள்ளும், நல்ல கவி பல தந்தார்கள்.
இராமாயணத்தை நம்புவதற்காக அல்ல, ரசிப்பதற்காகப் படிப்போம்.
கதையில் அறம் தேடாமல், கவியில் அழகு தேடுவோம்.
அதுவே கம்பனுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. அதுவே பாரதியின் பார்வை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.