;
Athirady Tamil News

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்; முன்னாள் துணை மேயர் மன்னன் கைது

0

தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னன் கைது
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக நிர்வாகி மன்னன் தன்னை அணுகியதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ரூ. 15 கோடியும், பின்னர் ரூ. 15 கோடியும் வழங்க மன்னன் முன்வந்ததாக முஸ்தபா தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், முஸ்தபாவிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து முஸ்தபாவின் உதவியாளர் கனியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளராக வலம் வந்த மன்னன், 2006 முதல் 2011 வரை மதுரை துணை மேயராக பதவி வகித்து வந்தார்.

மு.க.அழகிரியுடன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னன், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார்.

மன்னனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.