என்னை அன்று தடுத்து நிறுத்தினார் சந்திரபாபு நாயுடு: பெண் பாவம் பலித்துவிட்டதாக நடிகை ரோஜா கருத்து..!
ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கண்கலங்கினார்.
இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா பேசுகையில், “பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.
இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது. அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவது, முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.