;
Athirady Tamil News

எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! – அமெரிக்க அரசு!

0

ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், சர்வதேச அளவில் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், எண்ணெய்க் கப்பல்களின் முக்கிய வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கியுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் கப்பல்கள் அவ்வழியில் வந்தால் அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் படைகள் அறிவித்துள்ளன.

இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விலை உச்சத்தை அடைந்துள்ளதால், ஹோர்மூஸ் நிரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று கூறியதாவது:

“எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்குவது விரைவில் நடைபெறும். ஆனால், அந்த நடவடிக்கையை இப்போது மேற்கொள்ள முடியாது. நாங்கள் அதற்குத் தயார்நிலையில் இல்லை. இப்போது, எங்கள் ராணுவம் ஈரானின் கட்டமைப்புகளை அழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இராக் கடல்பகுதியில் அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் இந்திய பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில், அமெரிக்க எரிசக்தி அமைச்சரின் கருத்து பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.