;
Athirady Tamil News

ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்

0

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

தொடர்ந்து, ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈராக்கின் எர்பில் நகரிலுள்ள ஹரீர் விமான படை தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரானின் புரட்சி காவல் படை எனப்படும் ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவு 5 ஏவுகணைகளை கொண்டு சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இந்த படை தளம், சர்வதேச கூட்டணி படைகளுக்கான முக்கிய மையங்களில் ஒன்றாக உள்ளது.

இதேபோன்று இஸ்ரேல் அமைச்சக தகவலின்படி, ஈரானுடன் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலில் 2,339 பேர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அயதுல்லா அலி காமேனி மறைவுக்கு பின்னர், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் தாக்குதலில் காயமுற்றார் என செய்திகள் வெளிவந்தன. ஈரானின் புதிய உச்ச தலைவரை நாங்கள் தாக்கி அழிப்போம் என இஸ்ரேல் கூட தெரிவித்து இருந்தது. இந்த சூழலில், அவர் முதன்முறையாக வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகி உள்ளது.

மொஜ்தபா காமேனி வெளியிட்ட செய்தி, ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒன்றில் வாசிக்கப்பட்டது. அதில், ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம். அந்த பகுதியை ஈரான் தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என தெரிவித்தது. அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்கையை ஈரான் கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்க தளங்களை மூடி விடும்படி அறிவுறுத்தி வந்தது. ஏனெனில் அந்த இலக்குகளை ஈரான் கடுமையாக தாக்கும் என தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கச்சா எண்ணெய் அடங்கிய பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து உள்ளது. இந்த சூழலில், வளைகுடா பகுதிகளில் நிறைய கப்பல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. ஈராக் அருகே 2 சரக்கு கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகம் அருகே ஒரு கப்பல் தாக்கப்பட்டன. இதுவரை 6 கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.

இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசித்து வரும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.