ஹெய்தியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து – பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு…!!
கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கிடையே, அந்நாட்டின் வடக்குப்பகுதி நகரமான கேப் ஹெய்டனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை சந்தித்தது. அதிலிருந்து வெளியேறிய பெட்ரோலை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததால் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் 54 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்த விபத்து தேசிய பேரழிவு. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கேப் ஹெய்டன்நகர துணை மேயர் பேட்ரிக் அல்மோனார் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹெய்தி பெட்ரோல் டேங்கர் வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் 20 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.