;
Athirady Tamil News

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!! (படங்கள்)

0

ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைய வனவளத் திணைக்களங்களின் கீழ் உள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வனவளத் திணைக்களத்தின் காணி தொடர்பான பிரச்சனைகள் என்பவற்றுக்கு துரிதமாக தீர்வு காணும் முகமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வனவள பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா அவர்களின் ஏற்பாட்டில் இவ் கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் என்பவற்றை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், நீண்டகாலமாக வனவளத்தினால் விடுவிக்கப்படாமல் இருந்த மக்களது காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், உடனடியாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சனைகளக்கு தீர்வு காணப்பட்டதுடன், ஏனைய வனவள திணைக்களத்துடன் தொடர்புடைய காணிப்பிரச்சனைகளை 2 மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கான படிமுறை ஒன்றும் உருவாக்கப்டபட்டது.

வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன அவர்களின் பங்கேற்புடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், இரு மாவட்டங்களின் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.