;
Athirady Tamil News

வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை என அறிவிப்பு !!

0

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் (டியூட்டரி) ஜீ.சி.ஈ.உயர்தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்ற நாட்களின் எண்ணிக்கையை 03 தினங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையில் நேற்று திங்கட்கிழமை (27) மாலை, மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற டியூட்டரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான தட்டுப்பாடு, முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரித்த கட்டணம், தனிப்பட்ட வாகனங்களாயினும் எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் குறிப்பிட்ட சில காலத்திற்கு டியூட்டரிகளை மூடி, வகுப்புகளை இடைநிறுத்த வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

நாட்டு நிலைமை விரைவில் சீராகி விடும் என்ற நிச்சயம் இல்லாத நிலையில், வகுப்புகளை இடைநிறுத்துவதானது மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், பாடத்திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் எனவும் சில டியூட்டரி நிர்வாகிகள் இதன்போது எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், வகுப்புகளை இடைநிறுத்தாமலும் வகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்காமலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகின்ற நாட்களை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் டியூட்டரி நிர்வாகிகளின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி தற்போது 06 அல்லது 07 நாட்கள் வகுப்புகளில் பங்குபற்றுகின்ற ஒரு மாணவர் ஏதாவது 03 நாட்கள் மாத்திரம் வகுப்புகளுக்கு சமூகமளித்து, உரிய பாட வேளைகளை பூர்த்தி செய்யும் வகையில் இடைவேளை அடங்கலாக நேரசூசியை தயாரித்து, நடைமுறைத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, கல்முனை மாநகராட்சி எல்லையினுள் சாப்புச் சட்டத்தின் பிரகாரம் வெள்ளிக்கிழமைகளில் எந்தவொரு தனியார் கல்வி நிலையமும் இயங்க முடியாது என்ற அறிவுறுத்தல் முதல்வரினால் இதன்போது வழங்கப்பட்டதுடன், இதனை மீறி வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது தனியார் கல்வி நிலையம் இயங்குமாயின், அதன் நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.