;
Athirady Tamil News

கொசு ஒழிப்பு நடவடிக்கை- தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

0

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கொசுமூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் போன்ற பல்வேறு தொற்று நோய்களின் மாநில வாரியான பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழகம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது என்றும் கூறினார். மேலும் குடிநீர், சுகாதாரம் போன்ற துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், பிற தொடர்புடைய துறைகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறும் மாண்டவியா அறிவுறுத்தினார். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சிகள் நாடு முழுவதும் நோய் பரவலைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.