;
Athirady Tamil News

உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்..!!

0

நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுவை சந்தித்து கலந்துரையாடினர். அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வெங்கைய நாயுடு கூறியுள்ளதாவது: வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். வடகிழக்கு பகுதி சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கிடையே அடிக்கடி நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், நாட்டின் ஒற்றுமையையும். ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தக் கூடியவை. அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் நான் அண்மையில், பயணம் மேற்கொண்டேன். அழகிய நிலப்பகுதி, செழுமையான கலாச்சாரம், மக்களின் இனிய விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாநிலங்கள் உண்மையிலேயே சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம். வடகிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டு அதன் எழில், கலாச்சாரம் ஆகியவற்றை பிற மாநில மக்கள் அனுபவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை விஷயத்தில் வடகிழக்கு பிராந்தியம் நாட்டுக்கே வழிகாட்டுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கற்றுக் கொண்டு படிப்படியாக நீடித்த விவசாயத்திற்கு மாற வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு முன்னேற்றம், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலை அளிக்கிறது. விபத்துக்களைக் குறைக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.