;
Athirady Tamil News

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றன- குடியரசுத் தலைவர் பாராட்டு..!!

0

ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்ட நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஐஐடியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடிக்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

ஐஐடி டெல்லியிலும் மற்ற ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர். ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.

கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை. அவற்றின் கதைதான் சுதந்திர இந்தியாவின் கதை.

எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை உலகம் எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவின் இளம் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மனிதகுலம் ஒரு திருப்புமுனையை அடைய உதவுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.