;
Athirady Tamil News

இப்போ இதை கேட்பீங்க… பிறகு அதையும் எதிர்பார்ப்பீங்க… மாணவி கேட்ட சிம்பிளான கேள்விக்கு அநாகரிகமாக பேசிய அதிகாரி..!!

0

பிகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு, பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலந்துரையாடலின்போது, குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என அந்த மாணவி கேள்வி எழுப்பினார். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக தலைவரான ஹர்ஜோத் கவுர் பாம்ரா, பதில் அளிக்கையில், கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிகள் மத்தியில் என்ன பேசுகிறோம் என்றுகூட தெரியாமல் முகம்சுளிக்க வைக்கும் வகையில் பேசினார்.

‘நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்டும் தரலாம் என்று சொல்வீர்கள். அதற்குப் பிறகு, ஏன் சில அழகான ஷூக்கள் தரக்கூடாது? என்பீர்கள். கடைசியில் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்’ என ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது குறுக்கிட்ட மாணவி, மக்கள் போடும் ஓட்டுகள்தானே அரசாங்கத்தை உருவாக்குகின்றன என்று கேட்க, அதற்கும் குதர்க்கமாக பதில் சொன்ன அந்த அதிகாரி, “இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியானால் ஓட்டு போடாதீர்கள். பாகிஸ்தான் போன்று மாறுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் ஓட்டு போடுகிறீர்களா?’ என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது கருத்தை திசைதிருப்பும் வகையில் பேச்சை மாற்றினார். ‘எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் பெறவேண்டும்? இந்த சிந்தனையே தவறானது. உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்’ என கூறுகிறார் பாம்ரா. இந்த கருத்தரங்கில் பெரும்பாலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தரங்கில் நடந்த உரையாடல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. எனினும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வதாக பாம்ரா குற்றம்சாட்டி உள்ளார். ‘பெண்கள் உரிமைகள் மற்றும் அதிகாரம் பெறுவதற்காக அதிகமாக குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருத்தி. ஒவ்வொரு மன்றத்திலும் தவறு செய்ததற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர், ஒவ்வொரு மன்றத்திலும் தோற்றுவிட்டதால், இப்போது எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்’ என்கிறார் பாம்ரா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.