;
Athirady Tamil News

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்குவது தீவிரப்படுத்தப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

0

1 கோடி வீடுகள்
நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் 1 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக பெரும்பாலான கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்-மந்திரி கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

குடிநீர் இணைப்பு
கடந்த ஆகஸ்டு மாதத்திற்குள் 21 லட்சத்து 63 ஆயிரத்து 817 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள், அந்த இலக்கை தாண்டி 21 லட்சத்து 81 ஆயிரத்து 557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்து இருந்தனர். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர், அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மொத்த இலக்கில் 75 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், இதற்காக அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கர்நாடகத்தில் இதுவரை 55.66 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே 25 லட்சம் வீடுகளில் குடிநீர் இணைப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் கர்நாடகம் தேசிய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பகுதி திட்டம்
நடப்பு நிதியாண்டில் புதிதாக 32 லட்சம் வீடுகளுக்கு குநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்னும் 68.71 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகத்தில் புதிதாக நடத்தப்பட்ட ஆய்வின்படி கிராமப்புறங்களில் 1 கோடி வீடுகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்.

அதன் விவரம் பின்வருமாறு:-

முழுமையாக செயல்படவில்லை
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா கூட்டுறவு நிலவள வங்கி மேற்பார்வையாளர் குபேரா நாயக் கூறுகையில், “மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் பல கிராம பஞ்சாயத்துகளில் முறைப்படி செயல்படாமல் உள்ளது. குறிப்பாக தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா குருவா பஞ்சாயத்தில் இந்த திட்டம் கடந்த ஒரு ஆண்டாக முறையாக நடைமுறை படுத்தப்படாமல் உள்ளது. மேலும் மக்களிடம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஆனால் அதுவும் செய்யவில்லை. இதனால் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

இதற்கு முன்பு ஒன்னாளி தாலுகா கும்பளூரு, ஹிரேகோணிகெரே பஞ்சாயத்துகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாயில் பிடிக்கும் தண்ணீரை அளவிட மீட்டர்கள் அமைக்கப்பட்டது. இதை பார்த்த கிராம மக்கள் குடிக்கும் நீருக்கு எதற்கு மீட்டர் அளவுகோல் என்று கூறி அதை பிடுங்கி எறிந்தனர். மேலும் மீண்டும் அந்த மீட்டர் பொருத்தவிடாமல் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே மாநில அரசு இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

விவாதத்தோடு
நின்று போனது சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தை சேர்ந்த நர்மதா சந்தவேரி கூறுகையில், “கடந்த 6 மாதத்திற்கு முன் ஜல்ஜீவன் திட்டத்தில் மீட்டர் பொருத்தி குடிதண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மீட்டர் பொருத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகள் முறையாக விளக்கி கூறி அமல்படுத்தலாம்” என்றார்.

சிவமொக்கா மாவட்டம் அகசவல்லி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமண கொப்பா கிராமத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், “இதுவரை எங்கள் கிராமத்திற்கு இந்த குடிநீர் திட்டம் ஏதும் வரவில்லை. ஓராண்டுக்கு முன்பு இதுகுறித்து கிராம பஞ்சாயத்தில் விவாதிக்கப்பட்டது மட்டுமே தெரியும். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. தற்சமயம் தங்கள் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து மூலம் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் ஒரு பெரிய சிமெண்டு தொட்டியில் நிரப்பப்பட்டு குழாய் மூலம் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை தான் குடிக்க பயன்படுத்துகிறோம். எனவே ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

நல்ல திட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கோடிம்பாலா கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், “தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் சரியாக வருவது இல்லை. ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து எனக்கு தெரியவில்லை. மத்திய அரசின் இந்த திட்டத்தின் நோக்கமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது தான் என்று நீங்கள் கூறி தான் எனக்கு தெரியும்.. ஆனால் அதிகாரிகள் இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்தவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இந்த திட்டம் குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராப்புற மக்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்” என்றார். தட்சிண கன்னடா மாவட்டம் மூடுபித்ரி தொகுதிக்கு உட்பட்ட கிண்ணிகோலி அருகே பத்மனூர் கிராமத்தை சேர்ந்த சித்ராக்சி என்பவர் கூறுகையில், “தற்போதைக்கு பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வருகிறது. அதில் சிலநேரம் வரும் மாலையில்கூட சில நேரங்களில் குறைவாகத்தான் வரும் இருப்பினும் தற்போது தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது நல்ல திட்டம் தான். இதற்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் குடிநீர் சப்ளை கொடுக்கவில்லை. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்” என்றார்.

அதிகாரி என்ன சொல்கிறார்?
இதுகுறித்து கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமை செயலாளர் எல்.கே.அதீக் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நாங்கள் புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் கிராமப்புறங்களில் 1 கோடி வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இதுவரை 55.66 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 68 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு தினமும் 55 லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படும். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் கிராமப்புற வீடுகள் அனைத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நாங்கள் 4 பகுதிகளாக திட்டத்தை பிரித்துள்ளோம். முதல் பகுதி திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 2-வது பகுதி திட்டம் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது. 3 மற்றும் 4-வது பகுதிகள் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறோம். இவ்வாறு எல்.கே.அதீக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.