;
Athirady Tamil News

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்..!!

0

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது அவை கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காயங்குளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கள்ள நோட்டுகளை செலுத்தியவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் சுனில் தத் (வயது 54) என்பதும், டிரைவரான அவர், ஓட்டல் உரிமையாளர் அனஸ் (46) என்பவர் தான் அந்தப் பணத்தை கொடுத்ததாகவும் கூறினார். மேலும் ரூ.25 ஆயிரம் கொடுத்து, ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார், சூணாட்டைச் சேர்ந்த அனசை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த நோட்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அந்த நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை என தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை உறுதிப்படுத்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் 1967 (யு.ஏ.பி.ஏ.) வழக்குப் பதிவு செய்யப்படும். அதன்பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.