;
Athirady Tamil News

மும்பை-புனே விரைவு சாலையில் சுற்றுலா பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 2 மாணவர்கள் பலி..!!

0

தெற்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் மயங்க் என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மயங்க் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 10-ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் ராய்காட் மாவட்டம் கோபோலி பகுதியில் உள்ள தண்ணீர் பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக சுற்றுலா பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பஸ்சில் 48 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 52 பேர் பயணம் செய்தனர். அவர்கள் கோபோலி பகுதியில் உள்ள தண்ணீர் பூங்கா மற்றும் கேளிக்கை பூங்காவுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். சுற்றுலாவை முடித்துக்கொண்ட அவர்கள் பின்னர் கோபோலி பகுதியில் இருந்து அதே பஸ்சில் செம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் கோபோலி பகுதியில் மும்பை-புனே விரைவு சாலையில் மலைப்பகுதியில் இறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியது. தறிகெட்டு ஓடிய பஸ் சாலையிலேயே தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் ஹித்திகா தீபக் கண்ணா, ராஜ் மகாத்ரே ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருக்கு தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் அங்கு குவிந்தனர். உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் போலீசார், காயம் அடைந்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் லோனாவாலா, கோபோலி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.