;
Athirady Tamil News

பக்கச்சார்பின்றி செயற்படுவோம் – விக்ரமசிங்க!!

0

இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் சர்வதேச உலகில் இலங்கையை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் 97 ஆவது பயிற்சியை முடித்து வெளியேறும் கெடட் உத்தியோகத்தர்களின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு சனிக்கிழமை (17) இடம்பெ்றறது.

அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை இராணுவத்தின் தலைவர்கள் என்ற வகையில் உங்களுக்கும் இன்று முதல் பொறுப்பு உள்ளது. அதன்படி, இராணுவத்தையும் அதன் வீரர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

மக்களின் அரசாங்கம் என்ற வகையில் உங்களுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மரியாதையையும் அதன் நற்பெயரையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் உலக வல்லரசுகளிடமிருந்து ஒரு தரப்பாக பிரிந்து நிற்கவில்லை. உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஒரு தீவு நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.

உள்ளக மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன் உங்களிடம் உள்ளது. உங்களை உள்ளடக்கிய எங்கள் இராணுவத்துக்கு இராணுவ அனுபவம் உள்ளது. மேலும் அவர்களுக்கு சர்வதேச போர் அனுபவம் உள்ளது.

ஐ.நா படைகளுடன் இணைந்து மாலி அரசின் நடவடிக்கைகளில் நமது பாதுகாப்புப் படைகளும் பங்கு கொள்கின்றன.

அதனால் சவால்களை சமாளிக்க முடியும். எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு உள்ளது. எனவே, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து, நீங்கள் அனைவரும் வலுவாக முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த முந்நூற்று ஐம்பத்தொரு (351) கெடட் உத்தியோகத்தர்கள் அதிகாரிகளாக யமிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த நான்கு கெடட் உத்தியோகத்தர்களும் இங்கு பயிற்சி பெற்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.