;
Athirady Tamil News

சபரிமலையில் கற்பூர ஆழி ஊர்வலம்: திருவாபரண தேரும் இன்று புறப்பட்டது..!!

0

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்றும் 18-ம் படி ஏற 84 ஆயிரத்து 483 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பனுக்கு வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று ஐயப்பன் தங்க ஆபரணம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவர் அணியும் தங்க ஆபரணங்கள் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து இன்று தங்க ஆபரணம் ஊர்வலமாக சபரிமலை எடுத்து வரப்படும். அந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட தேர் பலத்த பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சபரிமலை நோக்கி புறப்பட்டது. இந்த தேருக்கு ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். 26-ந் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்படும். பின்னர் கருவறைக்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். இதற்கிடையே மண்டல பூஜை விழாவின் ஒரு பகுதியாக சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூர ஆழி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக கற்பூர ஆழி கோவில் சன்னிதானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் எழுப்பிய சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது. மண்டல பூஜைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம் மற்றும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி, பம்மை, நிலக்கல் பகுதியிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.