;
Athirady Tamil News

எதிர்காலத்தை கண்டுபிடித்த மின்சார ‘தீர்க்கதரிசி’ நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி மாற்றினார்?

0

நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்திற்கு கொண்டுவர உதவியது.

“நான் டெஸ்லாவை மின்சாரம் அல்லது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தின் தந்தையாக மட்டும் பார்க்கவில்லை. அவர் மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கிய தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார்” என வரலாற்றாசிரியரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மைக்கேல் க்ரவுஸ் பிபிசியிடம் கூறினார்.

1890களின் பிற்பகுதியில், தான் புதிதாகக் கண்டுபிடித்த மின்மாற்றியை அறிமுகப்படுத்துவதற்காக தனது கைகளில் ஒளிரும் குழாய்களைப் பிடித்தபடி நியூயார்க்கின் கொலம்பியா கல்லூரி மேடையைச் சுற்றி டெஸ்லா நடந்தபோது, ​​உலகம் பெரும்பாலும் இருளில்தான் இருந்தது.

“மின்சாரம் என்பது எதிர்காலத்திற்கானதாக இருந்தது. மேலும், பெரும்பாலான மக்கள் அதைக் காண காட்சிப்படுத்தப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது” என ‘Nikola Tesla and electrical future’ என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் இவான் ரைஸ் மோரஸ் எழுதியுள்ளார்.

பிரகாசமான விளக்குகள்

நிகோலா டெஸ்லா 1856 ஆம் ஆண்டு ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் பேரரசில் பிறந்தார். அவரது சொந்த ஊரான ஸ்மில்ஜான் தற்போது குரோஷியாவில் உள்ளது. இளம் வயதிலேயே டெஸ்லா அங்கிருந்து அமரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

பிரபல கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான தாமஸ் எடிசனுக்காக வேலை செய்வதற்காக 1884ஆம் ஆண்டு அவர் நியூயார்க்கிற்கு வந்தார்.

“டெஸ்லா பண்டைய உலகில் இருந்து வந்து, நவீன காலத்தின் கதாநாயகர்களில் ஒருவரானார்“ என்று க்ரவுஸ் கூறினார்.

மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியாளராக அவர் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்த போது, அவரது பைகளில் இரண்டு சென்ட்கள் மற்றும் பறக்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான செய்முறைக் கணக்கு மட்டுமே இருந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய இனெஸ் விட்டேக்கர் ஹன்ட் கூறுகிறார்.

ஆனால் டெஸ்லாவை பிரபலப்படுத்தியது அந்தப் பறக்கும் இயந்திரம் அல்ல. பல ஆண்டுகளாக, மாற்று மின்னோட்ட மோட்டார்களை உருவாக்குவதில் அவர் உழைத்தார்.
எதிர்காலத்தைக் கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்தினார்?

உலகம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், மேலும் அதிக ஆற்றல் தேவைப்பட்டது. எனவே விளக்குகளை ஒளிரச் செய்யவும், இயந்திரங்களை இயக்கவும் பயனுள்ள வழியைக் கண்டறிவதற்கான போட்டி இருந்தது.

“மின்னணு பரிமாற்றத்தில் இரண்டு போட்டி அமைப்புகள் இருந்தன” என மோரஸ் பிபிசியிடம் கூறினார்.

மின்சார கடத்தலுக்கு மாற்று மின்னோட்டம் அல்லது நேரடி மின்னோட்டம் பயன்படுத்தபட வேண்டுமா என்பதை நிறுவ அமெரிக்க தொழிலதிபரும் பொறியியலாளருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் டெஸ்லாவின் முதலாளி தாமஸ் எடிசனுக்கு இடையே கடும் போட்டி இருந்தது.

தாமஸ் எடிசனின் நிறுவனம் நேரடி மின்னோட்டத்தில் முதலீடு செய்தது. இது ஒரு திசையில், குறுகிய தூரத்திற்கு மற்றும் ஒரு மின்னழுத்தத்தில் மட்டுமே பாயக்கூடியது.

ஆனால் மாற்று மின்னோட்டம் பல திசைகளில் பாய்கிறது. இது நீண்ட தூரத்தை அடையக்கூடியது. மேலும், இதில் மின்னழுத்தங்களை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

“இது ஒரு குதிரையை ஜெட் விமானத்துடன் ஒப்பிடுவது போன்றது” என டெஸ்லாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் மார்க் சைபர் பிபிசி வரலாறு பாட்காஸ்டிடம் கூறினார்.
எதிர்காலத்தைக் கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்தினார்?

டெஸ்லா ஐரோப்பாவில் பணிபுரியும் போதே மாற்று மின்னோட்டத்தில் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். மேலும், 1883ஆம் ஆண்டிலேயே தனது முதல் மோட்டாரை உருவாக்கினார்.

ஆனால், எடிசன் நேரடி மின்னோட்டத்தை வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. அதன் பிறகு வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவின் மாற்று மின்னோட்ட மின்மாற்றிகள் மற்றும் மோட்டார் அமைப்புக்கான காப்புரிமையை வாங்கினார்.

டெஸ்லாவின் வடிவமைப்பில் ஆற்றலை அதிக தூரத்திற்கு குறைந்த செலவில் கடத்த முடிந்தது. அது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

“நாம் இன்னும் மாற்று மின்னோட்டத்தைப் பயன்படுத்துகிறோம். மேலும் இன்றைய மின் ஆற்றல் உற்பத்தி மற்றும் கடத்தல் செயல்முறை டெஸ்லாவின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் பெல்கிரேடில் உள்ள நிகோலா டெஸ்லா அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் இவானா ஜோரிக்.

டெஸ்லாவின் அமைப்பு மின் ஆற்றலின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கான முன்னணி முறையாக இன்னும் உள்ளது. மேலும், இன்றைய பல மின் சாதனங்கள் அவருடைய மற்றொரு கண்டுபிடிப்பைச் சார்ந்துள்ளன.

“மாற்று மின்னோட்ட மோட்டார்கள் இன்றும் புதுமையானவை. இன்று அவை தொழில்துறையிலும் பல வீட்டு உபயோகப் பொருட்களிலும், மின்சார கார்களிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார் ஜோரிக்.

வயர்லெஸ் முறையில் மின்சாரம் கடத்தும் முயற்சியில் 1891ஆம் ஆண்டு டெஸ்லா காயில் என்ற மின் ஆற்றலை வெளியிடும் ஒரு சாதனத்தை அவர் கண்டுபிடித்தார். இது இன்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்லாவும் வெஸ்டிங்ஹவுஸும் அமெரிக்காவின் ஐரோப்பிய கண்டுபிடிப்பின் 400ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிகாகோவில் நடந்த உலக கொலம்பிய கண்காட்சியை ஒளிரச் செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்றனர். அதன் பிறகு டெஸ்லா மிகவும் பிரபலமடைந்தார்.

“அவர் கண்டுபிடிப்பின் சக்தியை மக்கள் உணர்ந்தபோது, நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் வேலை டெஸ்லாவிற்கு கிடைத்தது” என ஜோரிக் கூறுகிறார்.
எதிர்காலத்தைக் கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்தினார்?

இது உலகின் முதல் நீர்மின் நிலையமாகும், மேலும் அதைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பதின்மூன்று காப்புரிமைகளில் ஒன்பது டெஸ்லாவுக்குச் சொந்தமானது.

அதன் பிறகு தனது சொந்த ஆய்வகத்தை நிறுவி வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் பரிமாற்றத் துறையில் டெஸ்லா பரிசோதனை செய்யத் தொடங்கினார்.

மோரஸின் கூற்றுப்படி, அவர் பொதுமக்களுக்கு தனது கதவுகளைத் திறந்தார்.
வயர்லஸ் எதிர்காலம்

வயர்கள் வழியாக செய்திகள் அனுப்புவதை உலகம் நம்பியிருந்த நிலையில், டெஸ்லா வயர்லெஸ் சமிக்ஞையை பரிசோதிக்கத் தொடங்கினார்.

ஆனால் அவரது அனைத்து புதிய சோதனைகளுக்கும் அவருக்கு நிதி தேவைப்பட்டது.1890களின் முற்பகுதியில் அமெரிக்க நிதியாளர் ஜே.பி. மோர்கனிடமிருந்து அவருக்கு நிதி கிடைத்தது. தனது வயர்லெஸ் உலக ஒளிபரப்பு கோபுரத்தை லாங் ஐலேண்டில் டெஸ்லா கட்டத் தொடங்கினார்.

உலகளாவிய வயர்லெஸ் தகவல்தொடர்புகளை வழங்குவதே அவரது பெரிய குறிக்கோளாக இருந்தது.

ஆனால் நிதியாளர் மோர்கன் பின்னர் தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.
எதிர்காலத்தைக் கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்தினார்?

டெஸ்லா பல்வேறு திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றினாலும், பெரும்பாலும் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டார். அறிவியல் மற்றும் பொறியியல் என்பது பலரை உள்ளடக்கிய செயல்முறை என்பதை அவர் புரிந்து கொள்ளததால் அவரது பல யோசனைகள் குறிப்புகளில் மட்டுமே இருந்தன.

“டெஸ்லா முக்கியமான ஒரு பிழையைச் செய்தார். தான் மட்டுமே மின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர் என்று அவர் நினைத்தார். அவர் யாருடனும் இணைந்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை” என மோரஸ் கூறுகிறார்.
டெஸ்லா மரணம்

டெஸ்லா 1943ஆம் ஆண்டு நியூயார்க் ஹோட்டல் அறையில் இறந்தார். இங்குதான் அவர் தனது வாழ்க்கையின் கடைசி தசாப்தத்தை கழித்தார்.

1951ஆம் ஆண்டு டெஸ்லாவின் உடமைகள் அவரது மருமகனின் முயற்சியால் செர்பியாவின் பெல்கிரேடுக்கு அனுப்பப்பட்டதாக ஜோரிக் கூறுகிறார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நிகோலா டெஸ்லா அருங்காட்சியகம் பெல்கிரேடில் திறக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இங்கு டெஸ்லாவின் திட்டங்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் உட்பட 1,60,000 ஆவணங்கள் இருப்பதால் பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

டெஸ்லாவின் காப்பகங்களை ஆன்லைனில் அணுக முடியும் என்றாலும், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலுக்கான போதிய இடம் இல்லாததால், அவரது பல தனிப்பட்ட உடைமைகள் பெட்டகங்களிலேயே உள்ளன.
எதிர்காலத்தைக் கண்டுபிடித்த நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி எளிமைப்படுத்தினார்?

தற்போது மற்றவற்றோடு டெஸ்லாவின் படுக்கை, குளிர்சாதன பெட்டி, அலமாரி, அவரது 13 சூட்கள், 75 டைகள், 40க்கும் மேற்பட்ட ஜோடி கையுறைகள் ஆகியவற்றை வைத்துள்ளோம் என்று கூறும் ஜோரிக், ஒரு பெரிய இடம் கிடைத்தவுடன் அவற்றையும் காட்சிக்கு வைக்க முடியும் என்று நம்புகிறோம் என்கிறார்.

1956ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் திறந்து ஒரு வருடம் கடந்த பிறகு, காந்தப்புலங்களின் வலிமையை அளவிடும் ஒரு அலகிற்கு டெஸ்லாவின் பெயர் சூட்டப்பட்டது.

தெருக்கள், பள்ளிகள் மற்றும் செர்பியாவில் ஒரு விமான நிலையத்திற்கு டெஸ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், செர்பியா மற்றும் குரோஷியா இரண்டு நாடுகளின் நாணயங்களிலும் டெஸ்லா உருவப்படம் உள்ளது.

தற்போதைய நிலையில், டெஸ்லா நமது எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைப்பார்?

“எதிர்காலம் மற்றும் அது கொண்டு வரக்கூடிய பிரச்னைகளை விட மனிதகுலம் சொகுசு வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துகிறது என டெஸ்லா கூறுவார் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் ஜோரிக்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.