;
Athirady Tamil News

சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி 14 -ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் சன்னிதானத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன்பின் அனந்தகோபன் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம் அமைத்து ஓய்வு எடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) எருமேலியில் அம்பலப்புழை, ஆலங்காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்காக வாவர் மசூதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.