;
Athirady Tamil News

10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த பிச்சை எடுக்க நேரிடும்-மைத்திரி ஆதங்கம்!!

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த கொழும்பு புறக்கோட்டையில் உள்ள போதி மரத்திற்கு எதிரில் டின் ஒன்றை குலுக்கி பிச்சை எடுக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவை நகரில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார் .

நான் பொருளாதார பலம் கொண்டவன் அல்ல
மைத்திரிபால சிறிசேன

10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்தும் அளவுக்கு நான் பொருளாதாரம் பலம் கொண்டவன் அல்ல. இதனால், எனக்கு நெருக்கமானவர்கள் எமக்கு நெருக்கமானவர்களிடம் பணத்தை சேகரிக்க தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையில் டின் ஒன்றை குலுக்கி பணத்தை சேகரிக்கவா நான் கேட்டேன். எனக்கு எவ்வித வருமானமும் கிடையாது. இந்த வழக்கை பற்றி பேசும் போது முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பவன் நான். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடக்கும் போது நான் வெளிநாட்டில் சிங்கப்பூரில் வைத்தியசாலையில் இருந்தேன். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்திருந்தாலும் பாதுகாப்பு அதிகாரிகள் அது பற்றி எனக்கு அறிவிக்கவில்லை என நான் பல முறை கூறியுள்ளேன்.

வழக்கு தீர்ப்பின் 85வது பக்கத்தில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தாலும் ஜனாதிபதிக்கு எந்த விதத்திலும் அதனை அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் செய்த தவறுக்கு நான் இழப்பீட்டை செலுத்த நேரிட்டுள்ளது
மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி நியமித்த அதிகாரிகள் தவறு செய்தால், ஜனாதிபதி அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை ஜனாதிபதி நியமிப்பார்.

புலனாய்வு சேவையின் பணிப்பாளரை நியமிப்பது பொலிஸ் மா அதிபர். இவர்கள் கடமையை நிறைவேற்ற தவறியதற்காகவே நான் 10 கோடி ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனது சொத்து விபரங்களை நான் வருடந்தோறும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். ஜனாதிபதியாக பதவி வகித்த 5 ஆண்டு காலத்தில் வருடந்தோறும் எனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளேன்.

எனக்கு நெருக்கமானவர்கள் தீர்மானித்துள்ளது போல், எனக்கு நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்புகளை பெற எதிர்பார்த்துள்ளேன். எப்படியான சவால்கள் வந்தாலும் எனது காலடியில் இடி விழுந்தாலும் அது என்னை பாதிக்காது.

எந்த சவாலையும் நான் சிரித்த முகத்துடன் எதிர்கொள்வேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.