இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டில், வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து அருகில் வசிப்பவர்கள் அவசர சேவைகளுக்குத் தகவல் அளித்தனர். ஆறு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 16 முதியோர்கள் பலியாகினர்.
மேலும் காயமடைந்த 15 பேர் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் உடல்கள் குடும்பங்களின் உதவியுடன் அடையாளம் காண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்தின்போது பலரை மீட்க அக்கம்பக்கத்தினர் உதவியதாகக் கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.