;
Athirady Tamil News

மனைவிகள் விற்பனை? சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்!

0

நமது அண்டை நாடான நேபாளத்துக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே சட்டவிரோதமான குற்றச்செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து நேபாளம் செல்லும் இளைஞர்கள், அங்குள்ள பெண்களை மணமுடித்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்களாம். இது என்னவோ சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், அதன் அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் தகவல்கள், ‘இப்படியெல்லாம்கூட நடக்குமா?’ என்ற எண்ணத்தை எழுப்புகின்றன.

சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படும் நேபாள இளம்பெண்கள் பாலியல் தொழில், பிற நாடுகளுக்குக் கடத்தல் மற்றும் பிற குற்றங் உள்பட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்களாம்.

சீனாவில் பாலின விகிதம் குறைந்து வருவதே, அங்குள்ள இளைஞர்கள் பிற நாட்டுப் பெண்களை மணமுடிக்க முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. சீனாவில் 100 பெண்களுக்கு 104 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. இதனால் இளம் பருவத்தினர் திருமணத்துக்குப் மணப்பெண் கிடைக்கமல் பிற நாடுகளில் பெண் தேடும் படலத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி, சீன இளைஞர்களுக்காக வெளிநாட்டுப் மணப்பெண்களை வரன் பார்க்கும் சட்டவிரோத ஆன்லைன் கட்டணச் சேவைகளும் அதிகரித்துள்ளன. இந்தச் சேவைகளை அதிக கட்டணம் (26,000 டாலர்களுக்கும் மேல் வரைகூட) செலுத்தி பயன்படுத்தும் இளைஞர்களுக்காக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி, அண்மைக் காலமாக சீன இளைஞர்கள் மணப்பெண்களைத் தேடி நேபாளத்துக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது. அப்படி நேபாளத்துக்குச் சென்ற சீன குடிமக்கள் ஆள் கடத்தல், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சீன இளைஞர்களுடன் நேபாள பெண்கள் தலைநகர் காத்மாண்டு உள்பட பல இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதை நேபாள அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். அந்த இளைஞரக்ளிடம் நடத்திய விசாரணையில், நேபாள பெண்களைப் படம் பிடித்து அந்த விடியோக்களை சீனாவிலிருக்கும் தங்கள் நட்பு வட்டங்களுக்கு சமூக ஊடகத் தளங்களில் அனுப்புவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நேபாளத்தில் அதிகரிக்கும் புகார்களைத் தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள சீன தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை சீன குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், சட்டவிரோத ஆன்லைன் வரன் சேவைகளை கண்மூடித்தனமாக நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் மட்டுமின்றி மனைவி விற்பனைக்கு என்ற பெயரில், லாவோஸ், மியான்மர், வியத்நாம் ஆகிய நாடுகளிலிருந்தும் சீனாவுக்கு இளம்பெண்கள் கடத்தப்பட்ட பகிரங்க தகவல்கள் அதிர்ச்சியை அதிகரிக்கச் செய்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.