;
Athirady Tamil News

இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தை பிரமாண்டமாக புதுப்பிக்கும் இஸ்லாமிய நாடு – என்ன காரணம்?

0

கிறிஸ்தவ ஞானஸ்நானங்களுக்காக பெயர்பெற்ற பாரம்பரிய இடமான ஜோர்டான் நதிக்கு ஓர் ஆண்டிற்கு சுமார் 2,00,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பார்வையாளர்கள், நாணல் நிறைந்த கரையில் புகைப்படம் எடுத்துக்கொள்வதை நான் கண்டேன்.

“நீங்கள் இந்தப் பகுதியில் இருக்கும்போது நிச்சயம் இங்கு வர வேண்டும். இது வரலாற்றின் ஒரு பகுதி” என்கிறார் பிரெஞ்சுக்காரரான ஆலிவர்.

”இயேசுவின் கால்தடங்களில் நடக்க வந்ததாகக் கூறுகிறார்’’ மேரிலாந்தைச் சேர்ந்த மார்க்.

மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பழமைவாத தேவாலயங்கள் எபிபானி நிகழ்வைக் கொண்டாடுவதால் இந்த மாதம் புனிதப் பயணம் செல்பவர்களுக்கான மாதமாகும்.

இயேசுவின் ஞானஸ்நானத்தின் 2,000ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2030ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களை அல்-மக்தாஸுக்கு ஈர்க்கும் நோக்கத்துடன் ஜோர்டான் சமீபத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு திட்டத்தை அறிவித்தது.

ஜோர்டான் நதி மற்றும் அதன் பள்ளத்தாக்கு யூதர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை அங்கீகரிக்கும் வகையில், அந்தப் பகுதியில் ஒரு விவிலிய கிராமம் மற்றும் மிகப்பெரிய கிறிஸ்தவ புனித யாத்திரை மற்றும் மத வேறுபாடற்ற சமூக மையம் அமைக்க ஜோர்டான் உறுதியளித்துள்ளது.

”ஜான் மற்றும் ஜூசஸுக்கு கிடைத்த அனுபவத்தை எங்களது பார்வையாளர்கள் மற்றும் புனித யாத்திரீகர்களுக்கும் கிடைக்கச் செய்வது சிறப்பு வாய்ந்தது’’என்கிறார் ஞானஸ்நான தளத்தின் பொது இயக்குநர் ருஸ்டோம் மக்ஜியன்.

“நான்கு சுவிசேஷங்களில் படித்ததை நீங்கள் இங்கு காண்பதால் இதை ‘ஐந்தாவது சுவிசேஷம்’ என்று நான் அழைப்பேன். இங்கு மத வரலாறு மற்றும் நம்பிக்கையின் மத்தியில் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்” என்றும் அவர் கூறுகிறார். ருஸ்டோம் மக்ஜியன் சுட்டிக்காட்டிய பல விஷயங்களில், யான்பவுட் என்ற பூர்வீக தாவரமும் ஒன்று. இது பைபிளில் விவரிக்கப்படும், ஒட்டக முடியில் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து புனித ஜான் வெட்டுக்கிளிகள் மற்றும் காட்டுத் தேன் சாப்பிடும் காட்சியை எனக்கு நினைவூட்டியது.

ஜோர்டானுக்கு வெளியே பெத்தானி என்றும் அறியப்படும் ஞானஸ்நானத்தளம், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய தளமாகும். இங்கு ரோமன் மற்றும் பைசண்டைன் தேவாலயங்களின் இடிபாடுகள், ஒரு துறவிமடம் மற்றும் ஞானஸ்நானக் குளங்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

ஜோர்டானின் இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு, 1995ஆம் ஆண்டு அவை திறக்கப்பட்டன. முன்னதாக, 1967ஆம் ஆண்டு தொடங்கிய மத்திய கிழக்குப் போர் காரணமாக ஆற்றின் இரு கரைகளும் மூடப்பட்ட ராணுவ மண்டலமாக இருந்தன.

“இந்த தளம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருப்பது நல்ல விஷயம். கற்பனை செய்து பாருங்கள், 11 பெரிய சுரங்கங்கள் அழிக்கப்பட்டன. சுரங்கங்களுக்குப் பதிலாக மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் வருகை பெரிய விஷயம் அல்லவா?” என்கிறார் மக்ஜியன்.

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையைவிட இங்கு வருபவர்கள் குறைவுதான் என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்று கத்தோலிக்க போப்கள், காப்டிக் சர்ச்சில் இருந்து இரண்டு போப்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பல தேவாலயத் தலைவர்கள் அல்-மக்தாஸுக்கு வருகை தந்துள்ளனர். பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இங்கு ஞானஸ்நானம் பெற்றுள்ளனர். மேலும் ஜோர்டானின் அரச நீதிமன்றம் பிரிட்டிஷ் அரச குடும்ப ஞானஸ்நானத்திற்கு புனித நீரை அனுப்பியுள்ளது.

ஜோர்டானிய அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் தெளிவான திட்டமிடலுடன் இங்கு புதிய தேவாலயங்களைக் கட்டியுள்ளன. இது மத்திய கிழக்கில் மிக அரிதான ஒன்று. ஜோர்டானின் முஸ்லீம் அரச குடும்பத்தின் முயற்சியைப் பாராட்டிய அமெரிக்க சுற்றுலாப் பயணி ஷரோன், இது என் மனதைத் தொடுகிறது என்றார்.

“நம் அனைவருக்கும் இடையே எவ்வளவு விஷயங்கள் பொதுவாக உள்ளன என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். மேலும் இங்குள்ள சொத்தில் பங்குபெறும் உரிமையை ஒவ்வொரு பிரிவினருக்கும் வழங்க ஜோர்டானிய அரசாங்கம் இவற்றை நிறுவுகிறது” என்றும் அவர் கூறினார்.

யுனெஸ்கோ பாரம்பரிய தளத்திற்கு அடுத்ததாக, 340 ஏக்கர் பரப்பளவில் புதிய ஞானஸ்நானம் மண்டலத்திற்கான திட்டத்தைக் கடந்த மாதம் மன்னர் அப்துல்லா வெளியிட்டார்.

இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட ஜோர்டானிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட லாப நோக்கற்ற அறக்கட்டளையின் தலைவர் சமீர் முராத், இந்தப் பகுதியின் ஒருமைப்பாடு பராமரிக்கப்படும் என்கிறார்.

“இந்தப் புனித தளத்தில் தீம் பார்க் போன்ற வணிகத்தன்மையுடன் கூடிய ஒரு சுற்றுலா தலத்தை உருவாக்க முயற்சிப்பது முட்டாள்தனமாகவும் விவேகமற்றதாகவும் இருக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.

’’இது கிறிஸ்தவத்தில் மூன்றாவது புனிதமான இடம். இயேசு இங்குதான் ஞானஸ்நானம் பெற்றார். எனவே அதை சிதைப்பது அல்லது எந்த வகையிலும் மீறுவது மிகவும் பொருத்தமற்றதாக இருக்கும்’’ என்றும் சமீர் முராத் கூறுகிறார்.

புதிய மேம்பாட்டு திட்டங்களில் தங்குமிடம் மற்றும் உணவகங்கள் உருவாக்கப்பட்டு, உள்நாட்டில் பயிரிடப்படும் இயற்கை உணவை பரிமாறுதலும் அடங்கும். இணையம் மற்றும் மின்சார கேபிள்கள் பூமிக்கடியில் அமைக்கப்படும்.

மண்டலத்தின் பெரும்பகுதி விவசாயத்திற்கும், பறவைகள் சரணாலயத்திற்கும் ஒதுக்கப்படும். சில விவிலிய தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்தின் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவில் இருந்து உதவி கோரப்பட்டுள்ளது.

அரசுகள், மத அமைப்புகள் உட்பட சர்வதேச கொடையாளர்களிடமும் ஜோர்டான் உதவி கோரியுள்ளது. மோதல்கள் நிறைந்த இந்தப் பிராந்தியத்தில், கலாச்சார வெளிப்படைத்தன்மை மற்றும் மத நல்லிணக்கம் மூலம் இந்தத் திட்டம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.