;
Athirady Tamil News

சிங்கள பேரின வாதத்தை தூண்டுகிறார் ரணில் !!

0

சர்வதேசத்துக்கு அரசியல் தீர்வு வழங்குவதாக தொட்டிலை ஆட்டிக்கொண்டு கொண்டு பிள்ளையைக் கிள்ளி சிங்கள பேரின வாதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூண்டி விடுகிறார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் குற்றம் சுமத்தினார்.

மீளப் பறிக்க முடியாத வகையில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றும் அதுதான் எமது மக்களுக்கான கௌரவ தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒற்றையாட்சி முறைமைக்குள் தான் அரசியல் தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது இந்த நாட்டை ஒருபோதும் உருப்பட வைக்காது .நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமானால் பிளவுப்படாத நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சி முறையில் தீர்வு வழங்க வேண்டும்.

போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அமைதி வழி போராட்டத்தை ஆயுத போராக மாற்றியமைத்தார். அவரின் போர் பிரகடனமே இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த மண்ணில் இன அழிப்பு இடம்பெற்றுள்ளது, இழக்க முடியாத அனைத்தையும் எமது இனம் இழந்துள்ளது. யுத்த காலத்திலும், இறுதி யுத்த காலத்திலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல இலட்சக்கணக்கான எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பிக்குகள் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொட்டிலை ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடும் வகையில் செயற்படுகின்றார்.

சர்வதேசத்துக்கு அரசியல் தீர்வு வழங்குவதாக தொட்டிலை ஆட்டிக்கொண்டு கொண்டு பிள்ளையைக் கிள்ளி சிங்கள பேரின வாதத்தை தூண்டி விடுகிறார்.

சமஷ்டி முறைமையில் தீர்வு வழங்க தயாராக இருந்தேன், ஆனால் அதற்கு சிங்களவர்கள் இடமளிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதியில் குறிப்பிடுவார்.

ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், இனப் பிரச்சினைக்கும் எவ்விதத்திலும் தீர்வு பெற்றுக்கொடுக்காது.

ஜனாதிபதியின் கொள்கை நாட்டை வங்குரோத்து நிலைக்கு தொடர்ந்து கொண்டு சென்று மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும்.13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் அரச அனுசரணையுடன் போர்க் கொடி தூக்குகிறார்கள்” என்றார்.

கரையோரச் சிங்களம், மலைநாட்டுச் சிங்களம், யாழ். தமிழ் என்ற சமஷ்டி அடிப்படையிலான யோசனைகளை 1926 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைள் வாயிலாக வெளியிட்ட முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க, இறுதியில் பௌத்த பிக்குவினால் படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.