;
Athirady Tamil News

ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டின் நற்பெயரை கெடுப்பதாக உள்ளது – பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

0

அதானி குழுமம் குறித்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை நிலை குறித்து விசாரணை குழு ஒன்றை அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், “அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், இந்த அறிக்கை இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது: ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே இரண்டு பொதுநல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின்மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது. அதனுடன் சேர்த்து வழக்கறிஞர் திவாரி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவும் விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

அதானி குழுமம் போலி நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், நிறுவனப்பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. இதற்கு அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், “ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நிறைந்தது.

அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் மீதான தாக்குதல் என்று கருத முடியாது. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்” என்று அதானி குழுமம் தெரிவித்திருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்து 50சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைக் கண்டன. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.